Breaking News

சிவகாசியில் ஆசிரியரை தாக்க முயன்ற மாணவன் : கல்வி அலுவலர், டி.எஸ்.பி., விசாரணை



விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அரசு பள்ளியில் ஆசிரியரை மாணவர் தாக்க முயன்றது தொடர்பாக கல்வி அலுவலர் மற்றும் டி.எஸ்.பி., விசாரணை நடத்தினர். திருத்தங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 10 ம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாட திருப்புதல் தேர்வு ஜன.,30 ல் நடந்தது.
மாணவர் பாண்டியன்,16, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றொரு மாணவரின் தேர்வு தாளை வாங்கி பார்த்து எழுதினார். இதை கவனித்த ஆசிரியர் ஜெயராஜ் மாணவரை கண்டித்தார்.


இதன் பின் மாணவர், ஆசிரியர் ஜெயராஜை பார்க்கும் போதெல்லாம் திட்டி உள்ளார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மோகன்குமாரிடம் புகார் கூறப்பட்டது. அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு மாணவர் பாண்டியனை அழைத்த உதவி தலைமை ஆசிரியர் , ஆசிரியர் ஜெயராஜ் முன்னிலையில் விசாரித்து மாணவரை கையால் முதுகில் அடித்துள்ளார். அப்போதும் ஆசிரியர் ஜெயராஜை மாணவர் திட்டினார். அங்கு வந்த உடற்கல்வி ஆசிரியர் விவேகானந்தன், மாணவரை கம்பால் அடித்துள்ளார். ஆத்திரமடைந்த மாணவர் உடற்கல்வி ஆசிரியரின் சட்டையை பிடித்து அடிக்க முயன்றார்.இதன்பின் கல்வித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சக்திவேல், உறுப்பினர் ரவிச்செல்வம் விசாரித்தனர்.



உடற்கல்வி ஆசிரியர் விவேகானந்தன், " மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவரின் எதிர்காலம் பாதிக்கப்படும் என கல்வித்துறை கருதினால் தனக்கு வேறு பள்ளிக்கு இடமாறுதல் வழங்க வேண்டும்,” என்றார்.



ஆசிரியர்களிடம் விசாரித்த சிவகாசி டி.எஸ்.பி.., வெள்ளையன் ," தேர்வில் பார்த்து எழுதிய மாணவர் மீது ஏன் அன்றே நடவடிக்கை எடுக்க வில்லை. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று மாணவர் ஆசிரியரை தாக்கும் நிலை உருவாகி இருக்காது,”என்றார்.


மாவட்ட கல்வி அலுவலர்," ஆசிரியரை அடிக்க முயன்றதை ஏற்க முடியாது. முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நாளை ( இன்று) நடக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்ட முடிவின்படி மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றார். பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.



வகுப்பறையில் சீட்டு விளையாடும் மாணவர்கள்:



திருத்தங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிக்கடி ஏற்படும் பிரச்னையால் நகரில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக ஓய்வு பெற சில மாதங்கள் உள்ளவர்களையே நியமிக்கின்றனர். இவர்கள் ஓய்வு பெறும் நாளை கருத்தில் கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நாட்களை கடத்துவதால் பிரச்னை நீருபூத்த நெருப்பாகவே உள்ளது.

*இங்கு படிக்கும் சில மாணவர்கள் வகுப்பறையிலேயே சீட்டு விளையாடுவது, மொபைல் போன்களில் 'கேம்' விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆசிரியைகளிடம் சில மாணவர்கள் தரக்குறைவாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

*இது போன்ற பிரச்னைகள் இங்கு தொடரும் நிலையில், இது தொடர்பாக புகார்கள் பல சென்றும் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஆசிரியர்கள் மட்டுமன்றி பெற்றோர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது