Breaking News

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க முடிவு

தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்போது படிக்கும் மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரங்களை தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால், அதிகமாக உள்ள ஆசிரியர்களை குறைவாக உள்ள இடங்களுக்கு பணி நிரவல் மூலம் நியமிக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


இதனால், அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்து பட்டியல் அனுப்ப வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது. இதற்காக, 26ம் தேதி முதல் தமிழகத்தில் திருச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தவும் தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் நடக்கும் கூட்டத்தில 5 மாவட்டங்களை சேர்ந்த 66 ஊராட்சி ஒன்றியங்கள், விழுப்புரத்தில் 5 மாவட்டங்களை சேர்ந்த 64 ஊராட்சி ஒன்றியங்கள், காஞ்சிபுரத்தில் 5 மாவட்டங்களை சேர்ந்த 67 ஊராட்சி ஒன்றியங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும், ஆய்வுக் கூட்டத்தில் அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலக நேர்முக உதவியாளர், பிரிவு கண்காணிப்பாளர், பிரிவு எழுத்தர், ஒன்றிய உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொடக்க கல்வித்துறையின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 31.8.2014ன்படி உள்ள ஆசிரியர், மாணவர் குறித்த விவரங்களை தயார் செய்து 25ம் தேதிக்குள் மாவட்ட கல்வி தொடக்க கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், அதற்கான படிவங்களை பூர்த்தி செய்யும்போது, 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பள்ளி மாதாந்திர அறிக்கை அடிப்படையில் மாணவர்கள் பதிவின்படி விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்கள் அந்தந்த வகுப்புகளுக்கு மொத்தமாக கணக்கிட்டு வகுப்புவாரியாக கொடுக்க வேண்டும். இருமொழி, மும்மொழி என சிறுபான்மை மொழிப் பள்ளிகளுக்கு படிவங்களில் தனியாக விவரங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.