தகவல்பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விரைந்து பதிலளிக்க அரசு உத்தரவு
தகவல்பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, உரிய காலத்திற்குள் தகவல்களை வழங்கவும், நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்கவும், மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
நாட்டின் பல்வேறு துறைகளில் நடைபெறும் செயல்பாடுகள், அரசு நடவடிக்கைகள், விதிமுறைகள்உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி எந்த ஒரு நபரும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆர்.டி.ஐ., மூலம் தகவல் பெற விண்ணப்பிக்கலாம்.இந்நிலையில், ஆர்.டி.ஐ.,மூலம் தகவல் கோரும் விண்ணப்பங்களுக்கு, தகவல் ஆணையத்தின் சார்பில் சரியான பதில் அளிக்கப்படுவதில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து, பொது தகவல் அதிகாரிக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:முறையான கட்டணங்களுடன் தகவல் கோரி விண்ணப்பிக்கும் ஆர்.டி.ஐ., விண்ணப்பதாரர்களுக்கு, உரிய காலத்திற்குள் அவர்களுக்கு வேண்டிய தகவலை அளிக்க வேண்டும். நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள், அதற்கான காரணங்கள் மற்றும் விளக்கங்களை காலதாமதமின்றி விண்ணப்பதாரருக்கு தகவல் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.ஒவ்வொரு குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமை உள்ளது. எனவே, அதிகாரிகள் அலட்சிய போக்குடன் நடந்து கொள்ளக் கூடாது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.