இந்த கல்வி ஆண்டிலாவது, வெளிப்படையான முறையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த, கல்வித்துறை முன்வர வேண்டும்' என,ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், பள்ளி துவங்குவதற்கு முன், ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
பணிமூப்பு அடிப்படையில்மாவட்ட வாரியாக, காலி பணியிட பட்டியல் சேகரிக்கப்பட்டு, பணிமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, அவர்கள் விரும்பிய இடங்களுக்கு, பணியிட மாறுதல் செய்து, உத்தரவு வழங்க வேண்டும்.எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு, கடந்த கல்வி ஆண்டில், கலந்தாய்வு, 'கலவரமாக' மாறியது. 'ஆன் - லைன்' வழியில் கலந்தாய்வை நடத்தியதும், முக்கிய நகரங்கள், நகரங்களை ஒட்டிய புறநகர் பகுதிகளில் உள்ள இடங்கள் மறைக்கப்பட்டதாக, ஆசிரியர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.
அதிக இடங்கள்:குறிப்பாக, பள்ளி கல்வித்துறையில், அதிக இடங்கள் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த, ராமேஸ்வர முருகன், இட மாற்றம் செய்யப்பட்டதற்கு, இதுதான் காரணம் எனவும், ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
தற்போது, பள்ளிக்கல்வி இயக்குனராக, கண்ணப்பன் உள்ளார். இந்நிலையில், வரும் ஏப்ரலில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது.
கடந்த ஆண்டைப் போல் இல்லாமல், இந்த ஆண்டாவது, வெளிப்படையான முறையில், கலந்தாய்வை நடத்த, அதிகாரிகள் முன்வர வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
லட்சங்களில் புரண்ட 'டிரான்ஸ்பர்'
கடந்த ஆண்டு, 'டிமாண்ட்' உள்ள இடங்கள், ஐந்து லட்சம் ரூபாய் வரை விலை போனதாக, ஆசிரியர் கூறுகின்றனர்.முக்கியமாக, குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில், தேவைக்கும் அதிகமாக, ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து, அதன்மூலம் பெரும் அளவிற்கு முறைகேடு நடந்ததாகவும்
ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, ஆசிரியர் சிலர் கூறியதாவது:விரும்பும் இடத்துக்கு, பணம் கொடுத்து மாறுதல் பெறுவது என்ற எண்ணம் ஆசிரியர்களிடையே அதிகரித்து விட்டது. இதனால், கிராமப்புற பள்ளிகளில், பணிபுரிய விரும்பாதவர்கள், உடனே வேறு பள்ளிக்கு மாறி விடுகின்றனர்.ஆசிரியர் உபரியாக உள்ள பள்ளிக்கும், 'நிர்வாக இடமாறுதல்'
கிடைத்து விடுவதால், அரசு பணம் விரயமாகிறது. இடமாறுதல் என்பதை, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே என்றும், அதையும் வெளிப்படையாக நடத்தவும், தமிழக அரசு முன் வரவேண்டும்.இல்லாவிட்டால், நிர்வாகத்தில் ஏற்படும் குளறுபடிகளால், அரசு பள்ளிகள் மூடும் நிலைக்குதள்ளப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.