வால்பாறை: வால்பாறை அருகே, அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில், 34 மாணவர்களுக்கு, ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும் நிலை இருந்து வருகிறது. கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது, சிறுகுன்றா மேல்பிரட்டு. இங்குள்ள அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில், 34 மாணவர்கள் படித்து வருகின்றனர். வனப்பகுதியில், அமைந்துள்ள இந்தப்பள்ளிக்கு, பகல் நேரத்தில் விலங்குகள் உலா வரும். இதனால், பள்ளியை சுற்றிலும், வேலி அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட, ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில், தற்போது தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவரே, ஐந்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்துகிறார். அவர், அலுவலகப் பணிக்காக வெளியில் சென்றால், பள்ளிக்கு விடுமுறை விட வேண்டிய நிலை ஏற்படுகிறது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதியிடம் கேட்டபோது, "இதுகுறித்து ஆய்வு நடத்திய பின்னர், இந்தப் பள்ளிக்கு மாற்றுப்பணி அடிப்படையில், ஆசிரியர்ளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.