உயிர் கொல்லி நோயான, 'எச் 1 என் 1' என்ற 'ஸ்வைன் ப்ளூ' என்ற நோயை பற்றி, பள்ளி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 'பள்ளி ஆரோக்கிய அபியான்' திட்டத்தை, பி.பி.எம்.பி., துவங்கியுள்ளது.
கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி (பி.பி.எம்.பி.,)யின் சுகாதார பிரிவு, முதன் முறையாக, பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு திட்டத்தை துவங்கியுள்ளது. பிப்., 9ம் தேதியிலிருந்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, பி.பி.எம்.பி., எல்லைக்கு உட்பட்ட, 40க்கும் அதிகமான பள்ளிகளில், இத்திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. பி.பி.எம்.பி., பள்ளிகளில், மருத்துவ பரிசோதனை நடத்தியபோது, எந்த மாணவர்களுக்கும், 'ஸ்வைன் ப்ளூ' நோய் தாக்கம் இருப்பது தெரியவில்லை. பி.பி.எம்.பி., எல்லையில், தெற்கு, கிழக்கு, மேற்கு பிரிவின் பள்ளிகளில், ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும், இரண்டு டாக்டர்கள் உட்பட நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுக்களுக்கு, தலைமை ஏற்றுள்ள டாக்டர் வேதா கூறியதாவது: முதன் முறையாக, பள்ளியில் ஆரோக்ய அபியான் நடத்தப்படுகிறது; இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பி.பி.எம்.பி., எல்லைக்குட்பட்ட, மேற்கு பிரிவில், மூன்று குழுக்கள், கிழக்கு பிரிவில், நான்கு குழுக்கள், தெற்கு பிரிவில், மூன்று குழுக்கள் செயல்படுகின்றன. இக்குழுக்கள், பள்ளிகளில், 'ஸ்வைன் ப்ளூ' காய்ச்சல் பற்றி, விவரிக்கின்றனர். இந்நோய், எவ்வாறு பரவுகிறது, அதை கட்டுப்படுத்துவது எப்படி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பள்ளிகளில் மாணவ, மாணவியரில் யாராவது காய்ச்சலால் அவதிப்படுவது தெரிந்தால், அவர்களுக்கு கூடுதல் சிகிச்சை வழங்கப்படுகிறது. நோய் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பற்றியும் தெரிவிக்கப்படுகிறது. தினமும், குறைந்தபட்சம், ஐந்து பள்ளிகளுக்கு சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.