பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், பிப்., 21ம் தேதியை, தாய்மொழி தினமாக கொண்டாட வேண்டும். அன்று பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்த யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து கடிதம்: ஒவ்வொரு ஆண்டும், பிப்., 21ம் தேதியை, சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாட வேண்டும் என, யுனஸ்கோ அறிவுறுத்தி உள்ளது.
அதனால், மாத்ரிபாஷா திவஸ் என்ற பெயரில், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள், அன்றைய தினம் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, பாட்டு போட்டி, பொது அறிவு நிகழ்ச்சி மற்றும் மொழிபெயர்ப்பு போட்டிகளை நடத்தி, தாய்மொழியின் மகத்துவத்தை உணர்த்த வேண்டும்.
நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், தாய்மொழியின் முக்கியத்துவம்; கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதலில் தாய்மொழியின் பங்கு, தாய்மொழியை பாதுகாத்தல், வளர்த்தல், பிற மொழிகளை கற்றல், கூடுதல் மொழிகளை கற்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும், அம்சங்களும் இடம் பெற வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.