முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்த முருகேஸ்வரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு கூறியுள்ளார்.
மனுவில், பொருளாதார பாடத்தில் பி.ஏ., எம்.ஏ. மற்றும் பி.எட். பட்ட வகுப்புகளை தமிழ்வழிக் கல்வியில் படித்து தேர்ச்சி பெற்றேன். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு 2013 ஜூலை 21 இல் நடைபெற்றது. அதில் 91 மதிப்பெண்கள் பெற்றேன். அதன்பிறகு 2013 அக்.23 இல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அதன் பிறகு வெளியிடப்பட்ட தேர்வுப்பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. நான் தமிழ் வழியில் படிக்கவில்லை எனக்கூறி எனக்கு பணி மறுக்கப்பட்டுள்ளது. இது தவறானது. தமிழ்வழிக் கல்வியில் தான் படித்துள்ளேன். எனக்கு பணி வழங்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தமிழ்வழியில் படித்ததற்கான இடஒதுக்கீடு பிரிவில் பணி வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளார். அதற்கான ஆவணங்களை சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்ப்பித்துள்ளார். ஆனால் தேர்வு வாரியம் அவர் தமிழ்வழியில் படிக்கவில்லை எனக்கூறி பணி வழங்க மறுத்துள்ளது.
மனுதாரர் தமிழ்வழியில் படித்துள்ளார் என்பது ஆவணங்கள் மூலம் உறுதியாகத் தெரியவந்துள்ளது. எனவே மனுதாரர் தமிழ்வழியில் படிக்கவில்லை என தேர்வு வாரியம் கூறியுள்ளது தவறானது. மேலும் தேர்வு நடைபெற்ற தேதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி ஆகியவற்றை தேர்வு வாரியம் தவறாக அளித்துள்ளது. எனவே தேர்வு நடைமுறையில் தவறு நடந்துள்ளது. மனுதாரருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் 12 வாரங்களில் பணி வழங்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.