ஐந்தாண்டு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று வெள்ளிக்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
ஐந்தாண்டு படிப்பு இடங்களின் எண்ணிக்கையை பல்கலைக்கழகம் இந்த முறை உயர்த்தியிருப்பதோடு, புதிதாக இரண்டு படிப்புகளையும் அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் இம்முறை புதிதாக தலா 60 இடங்களைக் கொண்ட பி.சி.ஏ.- எல்.எல்.பி, பி.பி.ஏ.-எல்.எல்.பி. என்ற இரண்டு புதிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, ஆற்றல்சார் பள்ளியில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப் படிப்புகளின் இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, பி.ஏ.-எல்.எல்.பி. படிப்பில் இருந்த 160 இடங்கள் 180-ஆகவும், பி.காம்.-எல்.எல்.பி. படிப்பில் இருந்த 80 இடங்கள் 120-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக ஆற்றல்சார் பள்ளியில் உயர்த்தப்பட்டிருக்கும் கூடுதல் இடங்களிலும், புதிய படிப்புகளிலும் வரும் 2015-16 கல்வியாண்டுமுதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 5 கடைசித் தேதியாகும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 12-இல் வெளியிடப்படும்.
இதுபோல இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு பி.ஏ,எல்.எல்.பி. படிப்பில் மொத்தமுள்ள 1,052 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 14-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 12 கடைசித் தேதியாகும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 26-இல் வெளியிடப்படும்.
இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி. படிப்புகளில் மொத்தமுள்ள 1,262 இடங்களில் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 25-ஆம் தேதி தொடங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூலை 17 கடைசித் தேதியாகும். தரவரிசைப் பட்டியல் ஜூலை 31-ஆம் தேதி வெளியிடப்படுகிறது