அறிவியல் தொழில்நுட்ப பயிற்சிக்காக, தமிழக மாணவர்கள், மூன்று பேர் உட்பட, நாடு முழுவதிலும் இருந்து, 30 மாணவர்கள், ஜப்பான் செல்கின்றனர். பள்ளிகளுக்கு இடையேயான, மாவட்ட அறிவியல் கண்காட்சியில் வென்று, மாநில அளவிலான போட்டியில் வெல்லும் மாணவர்கள், 'இன்ஸ்பயர்' விருது பெறுகின்றனர்.
இப்படிப்பட்ட மாணவர்களை, மேலும் ஊக்குவிக்கும் வகையில், தேசிய கண்காட்சியில் பங்கேற்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை, மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செய்கிறது. இந்நிலையில், நாடு முழுவதும், 'இன்ஸ்பயர்' விருது பெற்ற, 30 மாணவர்களை, மேலும் ஊக்குவிக்கும் வகையில், ஜப்பான் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இவர்களில், தமிழகத்தில் இருந்து, மூன்று பேர் தேர்வாகியுள்ளனர். அதில் இருவர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். திருப்பூர், பாண்டியன் நகர், சாரதா வித்யாலயா மாணவர் யுகவேந்தன், இடுவம்பாளையம் சுப்பையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் விக்னேஷ் ஆகிய இருவரும், ஜப்பான் செல்கின்றனர். இன்று, ஜப்பான் புறப்படும் அவர்கள், வரும், 16ம் தேதி வரை, ஜப்பானில், அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி பெறுகின்றனர். ஜப்பான் செல்லும், மற்றொரு மாணவர் யார் என, தெரியவில்லை.
மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு:
அனைத்து மாணவர்களுக்கும், டில்லியில் இருந்து, ஜப்பான் சென்று, திரும்பி வருவதற்கான செலவை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஏற்கிறது. தமிழக மாணவர்கள் மூன்று பேர், சென்னையில் இருந்து, டில்லி செல்வதற்கான செலவை, மாநில அறிவியல் மையம் மற்றும் தொழில்நுட்பத்துறை ஏற்கிறது.
கடந்த, 2012ல், தர்மபுரியில் நடந்த கண்காட்சியில், வீட்டில் உள்ள பொருட்களை இருக்கையை விட்டு நகராமல், 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்குவது குறித்து விளக்கி இருந்தேன். ஜப்பான் செல்ல மூன்று ஆண்டுகளாக காத்திருந்தேன்; தற்போது அவ்வாய்ப்பு கிடைத்துள்ளது.
யுகவேந்தன்
சென்னையில் நடந்த, மாநில அறிவியல் கண்காட்சியில், சாயக்கழிவு நீரில் இருந்து, மின்சாரம் தயாரிப்பது குறித்து, விரிவாக எடுத்துரைத்தேன். அதற்காக வழங்கிய, 'இன்ஸ்பயர்' விருது, என்னை டில்லிக்கு அழைத்துச் சென்றது. இப்போது, ஜப்பான் செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.