Breaking News

பள்ளியில் திறந்தவெளி கிணறு: கண்காணித்து அகற்ற உத்தரவு

புதிய கல்வியாண்டு துவங்கும் முன் பள்ளிகளில் திறந்தவெளி கிணறு, உயர் மின் அழுத்த கம்பி இருந்தால் அவற்றை கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடு செய்ய பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி துவங்கும் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகம், சீருடை வழங்க வேண்டும்.
இலவச பஸ் பாஸ்களை விரைந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றுத்தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.பாதுகாப்பு: முக்கியமாக பள்ளி திறக்கும் முன்பே அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு சென்று, பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்த வேண்டும்.குறிப்பாக பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறு இருந்தால் அவற்றை மூடிபோட்டு மூடவேண்டும். பள்ளி கட்டடம் சேதமடைந்திருந்தால் அவற்றை புனரமைக்க வேண்டும்.

பள்ளி வளாகத்திற்குள் உயர் அழுத்த மின்கம்பிகள் சென்றால், அவற்றில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகம், சுற்றுப்புறங்களில் முட்புதர் இருந்தால் அவற்றை ஆட்களை கொண்டு அகற்றி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"இந்த உத்தரவுகளை பின்பற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை ஆசிரியர்களுக்கு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இன்று (மே 25) தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கூட்டம் நடத்துகின்றனர்,” என்றார்.