Breaking News

தரம் உயர்த்தி 4 ஆண்டுகள் கடந்தும் வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் மாணவர்கள் அவதி

சித்தேரிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


ரிஷிவந்தியம் அடுத்த சித்தேரிப்பட்டில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பாலப்பட்டு, சித்தேரிப்பட்டு, பழையசிறுவங்கூர், சூளாங்குறிச்சி, பள்ளிப்பட்டு, வேளானந்தல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவர்கள், இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இப்பள்ளி கடந்த 2008ம் ஆண்டு வரை உயர்நிலைப் பள்ளியாக இருந்தது.

இப்பகுதியில் உயர்நிலை வகுப்பு முடித்த மாணவர்கள், மேல்நிலை வகுப்பு படிப்பதற்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஆகிய பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சித்தேரிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி, கடந்த 2009ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இதையடுத்து மேல்நிலை வகுப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையும் அதிகரிக்க துவங்கியது. மேல்நிலைப்பள்ளி என்பதால், மாணவர்களுக்கு வகுப்பறைகள், ஆய்வகங்கள் உபகரணங்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் வசதிக்கேற்ப வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டது.

கடந்த 2010-2011ம் கல்வி ஆண்டில், இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் அமைக்க நபார்டு திட்டத்தின் மூலம் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் 24 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்கள் கொண்ட கட்டட வேலைகள் துவங்கியது.

அரைகுறை

கட்டட வேலை பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால், வகுப்பறைகள் அரைகுறையாக உள்ளன. இதனால், இங்கு பயிலும் மாணவர்கள் போதிய வகுப்பறை வசதியின்றி, மரநிழலில் அமர்ந்து படிக்கின்றனர். அரைகுறையாக உள்ள கட்டட சுவற்றில் கருப்பு வண்ண பெயிண்ட் அடித்து வகுப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் இப்பள்ளியில், வகுப்பறை கட்டடம் இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

பேருந்து வசதி

பள்ளியின் காலநேரத்திற்கு ஏற்ப பேருந்து வசதி செய்யப்படவில்லை. பழையசிறுவங்கூர், சிங்காரப்பேட்டை, தொண்டனந்தல் கிராமத்தில் இருந்து பேருந்து இல்லாததால் மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர். மேலும் பள்ளிப்பட்டு, சூளாங்குறிச்சி வழியாக காலநேரத்திற்கேற்ப ஒரு பேருந்து மட்டும் செல்கிறது. இதனால் இப்பகுதி மாணவர்கள் போட்டிபோட்டு பேருந்தில் ஏறி செல்கின்றனர். மாணவர்கள் பலர் சைக்கிளிலும், நடந்தும் பள்ளிக்கு செல்கின்றனர்.

கடும் அவதி

வகுப்பறை கட்டடம் இல்லாததால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கட்டட செலவிற்கென அரசு நிதி ஒதுக்கி, பல ஆண்டுகளாகியும் கட்டடவேலை நடைபெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதுடன், மாணவர்களின் கல்வித்தரம் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

நடவடிக்கை தேவை

மாணவர்களின் கல்வி நலனை கருதி, இப்பள்ளியின் காலநேரத்திற்கு ஏற்றவாறு பேருந்து வசதியினை ஏற்படுத்திடவும், ஆண்டுக்கணக்கில் அரைகுறையாக நிற்கும் கட்டட பணிகளை முழுமையாக செய்து முடிக்கவும், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பள்ளியில், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில், 85 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 2 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

இதனால் இப்பகுதியை சேர்ந்த நடுத்தர குடும்பத்தினர், தங்களது பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்க்க விருப்பப்பட்டாலும், அடிப்படை வசதிகள் இல்லாத காரணங்களால் வெளிப்பகுதி பள்ளியில் சேர்க்க வேண்டிய நிலை உள்ளது.