Breaking News

எஸ்எஸ்எல்சி தேர்வில் மறுமதிப்பீடு கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

எஸ்எஸ்எல்சி தேர்வில் மறு மதிப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. தஞ்சாவூர் அம்மன்பேட்டையைச் சேர்ந்த பி.முத்தழகு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இவ்வாறு உத்தரவிட்டார்.

மனுவில், எனது மகள் காவ்யா, 2014 இல் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 488 மதிப்பெண் பெற்றார். அவருக்கு தமிழ் 2 ஆம் தாளில் 87 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருந்தன. தமிழில் மட்டும் மதிப்பெண் குறைந்ததால் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தேன். மதிப்பெண் கூட்டலில் தவறு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தகவலறியும் சட்டத்தின் கீழ் விடைத்தாள் நகல் பெற்றேன். அதை பார்த்த போது, தமிழில் முழு மதிப்பெண் அளிக்கப்பட வேண்டிய  7 கேள்விகளுக்கு மதிப்பெண் குறைவாக அளிக்கப்பட்டு இருந்தது. எனவே மதிப்பெண் அளிக்கப்பட்டதில் தவறு நடந்துள்ளது. 
ஆனால் மறு மதிப்பீடு செய்யக்கோரிய மனுவை தேர்வுத்துறை ஏற்கவில்லை. எனது மகள் பள்ளியில் அனைத்து பாடங்களிலும் முதலிடத்தில் இருந்தார். பள்ளியில் 490 மதிப்பெண் பெற்றவர்களுக்கு இலவச கல்வி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தவறான மதிப்பீடு காரணமாக இந்த வாய்ப்பு பறிபோயுள்ளது. எனவே எனது மகளின் தமிழ் விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய அரசுத்தேர்வுத்துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்எஸ்எல்சி தேர்வில் மறு கூட்டலுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.மறு மதிப்பீடு செய்யும் முறை கிடையாது. மதிப்பெண் கூட்டலில் தவறு இருந்தால் சரி செய்து கொள்வதற்காகவே மனுதாரருக்கு விடைத்தாள் நகல் அளிக்கப்பட்டது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். விடைத்தாளில் அனைத்து கேள்விகளும் திருத்தப்பட்டு மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் கூறுவது போல், சில கேள்விகளுக்கு குறைவான மதிப்பெண் அளிக்கப்பட்டு இருந்தாலும், அவை முழு மதிப்பெண் அளிக்கத் தகுதியானவை எனக் கூறுவதை ஏற்க முடியாது. மேலும் எஸ்எஸ்எல்சி தேர்வில் மறு மதிப்பீடு செய்யும் முறையும் இல்லை. மறு மதிப்பீடு செய்யுமாறு அதிகாரிகளை வற்புறுத்த முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால் இது போன்று ஏராளமானோர் நீதிமன்றத்தை நாடி வரக்கூடும். தேர்வு நடத்துவதன் நோக்கத்தை அது பாதிக்கும் என்பதால் மனுதாரருக்கு பரிகாரம் அளிக்க இயலாது எனக்குறிப்பிட்டுள்ளார்.