Breaking News

மதிப்பெண்களை அள்ளும் மாணவர்கள் - கல்வியியல் நோக்கில் இருந்து விலகும் பள்ளிக்கல்வி துறை: கல்வியாளர்கள் கவலை

'பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது; கல்வியியல் நோக்கத்தில் இருந்து, பள்ளிக்கல்வித் துறை விலகிச் செல்கிறது. கற்பித்தல் முறையிலும், மதிப்பீட்டு முறையிலும் கட்டாயம் மாற்றம் அவசியம்' என, கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.


கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி:

பத்தாம் வகுப்பு தேர்வில், நல்ல 'ரிசல்ட்' கிடைத்துள்ளது. அறிவியல் பாடத்தில், 10 மாணவர்களில், ஒருவர், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்துள்ளது, ஆச்சரியமாக உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன், 400 மதிப்பெண் என்பது, சரித்திரமாக இருந்தது; இப்போது, 499, 500 மதிப்பெண் எல்லாம் எடுக்கின்றனர். மாநிலத்தில், முதல் மூன்று இடங்களை பிடித்தோர் எண்ணிக்கை, 700க்கு மேல் போகிறது; அடுத்தடுத்த ஆண்டுகளில், 2,000 ஆக உயரும்.இது, சரியான அறிகுறி அல்ல. அகில இந்திய நுழைவுத்தேர்வுகளில், நாம், 29வது இடத்தில் இருக்கிறோம்; இன்னும் பின்னடைவு ஏற்படும். புள்ளிவிவரங்கள் பார்க்கவும், கேட்கவும் நன்றாக உள்ளது. 
உண்மையில், மாணவர்களின் திறன் சார்ந்தாக இல்லை. மதிப்பெண் குவிந்ததற்கு, வினாத்தாள் மிக எளிமையாக தயாரிக்கப்பட்டதே காரணம். வினாத்தாள், 40 சதவீதம் எளிதாகவும்; 30 சதவீதம் சற்று கடினமாகவும்; 30 சதவீதம், பாடத்திட்டம் சார்ந்து, அதே நேரத்தில், புத்தகத்தில் இல்லாமல், மாணவர்கள் சிந்தித்து எழுதும் வகையில், அமைய வேண்டும். 
அதுதான், மாணவர்களின் உண்மையான திறனை வெளிப்படுத்தும்; அதற்கேற்ப வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம் கொண்டு வருவது, காலத்தின் கட்டாயம்.

பொது பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ்:

மாணவர்கள், ஆசிரியர்கள் உழைத்து வெற்றி பெற்றுள்ளனர்; அவர்களை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில், கல்வியியல் செயல்பாட்டில் இருந்து, பள்ளிக்கல்வித் துறை விலகி, சான்று அளிக்கும் துறையாக மாறி உள்ளது. கல்வி ஏற்பாட்டின் நோக்கம் நிறைவேறுகிறதா என, கணக்கிடுவதற்கு பதிலாக, மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றனர் என்று கணக்கிடப்படுகிறது. தனியார் பள்ளிகளை பார்த்து, அரசு பள்ளிகளும் கூட மதிப்பெண் பெற வைப்பது தான், நோக்கம் என வந்துவிட்டன. இது, கற்றல் சமூகத்திற்கான முறை கிடையாது; இந்த முறை மாற வேண்டும். வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் முறை; மதிப்பீட்டு முறையும் மாறினால் தான், கல்வி நிலை உயர்ந்ததாக கருத முடியும். தேர்ச்சி விகிதம், கூடுதல் மதிப்பெண்ணை வைத்து, கல்வித்தரம் உயர்ந்து விட்டதாக கருத முடியாது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தேர்வு முடிவுகள் மிகுந்த கவலை அளிப்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறுகையில், 'தேர்வு முறை சரியாக இல்லை; இத்தனை சதவீத தேர்ச்சி வேண்டும்; 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை, இவ்வளவு இருக்க வேண்டும் என, அரசு தரப்பு கூறுவதை, நிறைவேற்றும் வேலையை பள்ளிக்கல்வித் துறை செய்துள்ளது; இது, ஆரோக்கியமானது அல்ல; மாணவர்கள் சிந்தனைத் திறனை மேம்படுத்துவதாக, இருக்க வேண்டும்; மதிப்பீட்டு முறையில், கட்டாயம் மாற்றம் வேண்டும்' என்றனர்.