Breaking News

மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்: கல்லூரியில் சேர வழியில்லாமல் தவிப்பு


துறையூர்: திருச்சி மாவட்ட அளவில், அரசு பள்ளி களில் பிளஸ் 2 தேர்வில், முதலிடம் பெற்ற கூலி தொழிலாளியின் மகன், வறுமையால் கல்லூரியில் சேர வழியில்லாமல் தவிக்கிறார்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பச்சப்பெருமாள்பட்டி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மோகன். இவர், பிளஸ் 2 தேர்வில், 1,145 மதிப்பெண் எடுத்துள்ளார். அரசு பள்ளிகளில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். தற்போது, சென்னையில் ஒரு ஓட்டலில் பணி செய்கிறார். மோகனின் தந்தை பிச்சை, தாய் தனலட்சுமி ஆகியோர் விவசாய கூலி வேலைக்கு சென்று, குடும்பத்தை நடத்தி வருகின்றனர். மோகனின் குடும்ப சூழலை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி, கல்லூரியில் சேர்வதற்கு ஆரம்பக்கட்ட உதவியை செய்துள்ளார். மோகன் கூறுகையில், ''இன்ஜினியரிங் படிப்பதற்கு, 194.5 'கட் - ஆப்' மார்க் எடுத்துள்ளேன். குடும்ப வறுமை காரணமாக, இன்ஜினியரிங் படிக்க முடியாத நிலையில் உள்ளேன். அரசும், உதவும் மனப்பான்மை உள்ளவர்களும் உதவி செய்தால், இன்ஜினியரிங் படிக்க முடியும்,'' என்றார். மோகனுக்கு உதவ விரும்புவோர், 86953 81571, என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.