Breaking News

தனியார் பள்ளிகளுக்கு 97 கோடி ரூபாய் வழங்க எதிாப்பு: இலவச மாணவர் சேர்க்கையில் கூடுதல் கட்டணம் வசூல்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி சேர்க்கப்பட்ட மாணவர்களிடமும், தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்துள்ளதால், பள்ளிகளுக்கு, அரசின், 97 கோடி ரூபாயை தரக் கூடாது என, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், இரு வாரங்களுக்கு முன், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஏழைகள், நலிவடைந்த பிரிவு குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதில், 2013 - 14ல், 49,864; 2014 - 15ல், 86,729 குழந்தைகள், தனியார் பள்ளிகளின் அறிமுக வகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு செலவினமாக, 2013 - 14க்கு, 25.13 கோடி; 2014 - 15ல், 71.91 கோடி ரூபாய் வழங்க, தனியார் பள்ளிகள் கடிதம் அனுப்பியுள்ளன. எனவே, 97.04 கோடி ரூபாயை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என, கேட்டிருந்தார்.


உத்தரவு:




ஆனால், மத்திய அரசு வெறும், 14 லட்சம் ரூபாய் மட்டுமே அனுமதித்ததால், தமிழக அரசே ஏற்று, 96 கோடி ரூபாய், தனியார் பள்ளிகளுக்கு வழங்க உத்தரவிட்டது. இதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்கள் வரிப் பணமான அரசின் நிதியை, சட்ட விதிகளுக்கு முரணான வகையில், தனியார் பள்ளிகளுக்கு தரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழக அரசுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனருக்கும், அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டுகளில், தமிழக சட்டசபையில் வெளியிட்ட அறிக்கைகளில், தனியார் பள்ளிகள், கட்டாயக் கல்வி சட்டத்தில், இலவசமாக மாணவர்களை சேர்க்க முன் வரவில்லை என, கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, 1.36 லட்சம் குழந்தைகளை சேர்த்தனர் என, ஒரு கணக்கை சொல்லி, அதற்காக அரசு நிதியை ஒதுக்கியுள்ளனர்; இது ஆபத்தானது. நர்சரி பள்ளிகள், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., போன்றவற்றிற்கு, அனைத்து மாணவ, மாணவியரிடமும் கட்டணம் பெற்று விடுகின்றனர். இலவச சேர்க்கையில், சில குழந்தைகளிடம் கல்விக் கட்டணம் பெறாவிட்டாலும், சீருடை, புத்தகம், நோட்டுகள், கட்டட நிதி என, வசூலித்து விட்டனர். ஆனால், மத்திய அரசின் கல்வி உரிமை சட்டப்படி, மாணவர்களிடம் எந்த வகையிலும் கட்டணம் பெறக் கூடாது. ஒரு மாணவருக்கு ஆகும் செலவானது, மாணவர்களின் மதிய உணவுக்கும் சேர்த்தே கணக்கிடப்பட்டுள்ளது.


சந்தேகம்:




ஆனால், மாணவர்களிடமும் பணம் வசூலித்து விட்டு, கூடுதலாக அரசும் நிதி கொடுப்பது எந்த வகையில் நியாயம்? இலவச மாணவர் சேர்க்கைக்கு என, பள்ளி களிடமோ, அரசிடமோ கணக்குகளோ, ஆவணங்களோ இல்லை. மேலும், இப்பள்ளிகளுக்கு ஒரு பாடத்திட்டமோ, அரசு வரையறுத்த விதிமுறைகளோ இல்லை. தகுதியான ஆசிரியர்கள் பெரும்பாலான இடங்களில் நியமிக்கப்பட வில்லை. எனவே, அரசு நிதி, 97 கோடி ரூபாயை, தனியார் பள்ளிகளுக்கு எந்தவித ஆவணங்களும், ஆதாரங்களும் இல்லாமல், அவசரமாக வழங்க முடிவு எடுத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.