Breaking News

இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு: பள்ளிக்கல்வி அமைச்சர்

தமிழக அமைச்சர் கே.சி.வீரமணி இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.



மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வு மூலமாக அரசுப் பள்ளிகளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஆண்டு தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், சர்வதேச அருங்காட்சியக தினத்தை ஒட்டி சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இன்று சிறப்பு கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் வீரமணி, ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:

வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த தகுதித் தேர்வு மூலம் ஏறத்தாழ 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படலாம். தகுதித் தேர்வு தேர்ச்சியில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் தளர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் வீரமணி கூறினார்.