பிளஸ் 2 தேர்வில், கணித வினாத்தாள் மொபைல்
போன், 'வாட்ஸ் அப்'பில் வெளியானது போல், நேற்று, 10ம் வகுப்பு தேர்வு
முடிவுகள், முன்கூட்டியே வெளியானதால் கல்வித் துறையினர்
அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.
சிபாரிசு:
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை, நேற்று
காலை, 10:00 மணிக்கு, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டார்.
ஆனால், காலை 8:00 மணிக்கே மாவட்டங்களில் தேர்வு முடிவுகள், 'லீக்' ஆகி
விட்டது. பல இடங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு
தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர், தங்கள் மாணவர்களின்
பதிவு எண்ணுக்கு, என்ன மதிப்பெண் என்பதை, பாடவாரியாக தெரிந்து கொண்டனர்.
காலை, 9:00 மணிக்கே, தங்களுக்கு பிளஸ் 1 வகுப்பில், என்ன பாடப்பிரிவு
வேண்டும் என, தங்களுக்கு தெரிந்த கல்வி அதிகாரிகளிடம் சிபாரிசு கேட்க
துவங்கி விட்டனர்.
'வாட்ஸ் அப்'பில்...:
இதேபோல், மாநில முதல் இட பட்டியலில் இடம்
பெற்ற, சில பள்ளிகளால், மாணவ, மாணவியரின் விவரங்கள், புகைப்படத்துடன்,
'வாட்ஸ் அப்'பில், காலை, 9:30 மணிக்கே வலம் வரத் துவங்கின. தேர்வுத் துறை
இயக்குனர் வெளியிடும் முன்பே, மாநிலப் பட்டியலில் இடம் பெற்றோர் விவரம்,
பொதுமக்களுக்கு தெரிந்து விட்டது. பிளஸ் 2 தேர்வில் வினாத்தாள், 'வாட்ஸ்
அப்'பில், 'லீக்' ஆன நிலையில், தற்போது, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும்
வெளியாகி விட்டதே என, கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள்
கூறியதாவது:நேற்று முன்தினம் இரவே, தேர்வு முடிவு விவரங்கள் மாவட்ட
வாரியாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு எடுத்துச்
செல்லப்பட்டன. பின், அங்கிருந்து காலை, 8:00 மணிக்கே, பள்ளிகளின் தலைமை
ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப் பட்டன.
விசாரணை:
அதனால், அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும்
அலுவலர்களில் சிலர், முத்திரையிடப்பட்ட பட்டியல் கவரை, காலை, 10:00 மணிக்கு
முன் பிரித்து பார்த்து, இந்த விவரங்களை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.இந்த
விஷயத்தில் துறை ரீதியாக விசாரணை நடத்தவும், முடிவுகள், 'லீக்' ஆன
மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் தலைமை ஆசிரியர்களிடம்
விசாரணை நடத்தவும் முடிவு செய்து உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
'ரிசல்ட்' வெளியிடுவதில் குளறுபடி:
தேர்வுத்துறை இயக்குனர் தேர்வு முடிவுகளை
வெளியிட்ட போது, போலீசார், தேர்வுத் துறையினர் இடையே நெரிசல் ஏற்பட்டது.
பத்திரிகையாளர்களுக்கு தேர்வு முடிவு குறித்த பட்டியலை வழங்க முறையாக
திட்டமிடாததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பலர் கீழே விழுந்து தரையில்
உருண்டனர். பணியாளர்கள் எனக் கூறிக்கொண்டு, அடியாட்கள் போல் நின்ற சிலர்,
பத்திரிகையாளர்களை கீழே தள்ளி விட்டனர். கூட்டத்தில் போலீசாரும் புகுந்து,
தங்களுக்கு சில பட்டியல்களை எடுத்துக் கொண்டனர்.