பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் வழங்கும் போது, அதில் எழுத்துப் பிழை இருந்தால், தலைமையாசிரியரே திருத்தம் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரம், 'மதிப்பெண் சான்றில், மதிப்பெண் விவரத்தில், 'கை' வைக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாணவர் பெயர், பள்ளி, முகவரி, மதிப்பெண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றில், எழுத்துப்பிழை, அச்சுப்பிழை வருவதால், இந்த ஆண்டு கல்வித் துறை மாற்றுத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
பள்ளிகளில் தலைமையாசிரியர், மாணவரின் தற்காலிக மதிப்பெண் பட்டியலை, ஆன் - லைனில், 'பிரின்ட் அவுட்' எடுத்து, சான்றொப்பம் இட்டு, தற்காலிகமாக நேற்று முதல் வழங்கி வருகின்றனர்.தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், எழுத்துப்பிழை, அச்சுப் பிழை இருந்தால், அந்தந்த தலைமையாசிரியரே, திருத்தம் செய்து கொள்ளலாம் என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், மார்க் விவரங்களில் திருத்தம் செய்ய, தலைமை ஆசிரியருக்கு அதிகாரமில்லை.
இதனால், அசல் மதிப்பெண் சான்று வரும் வரை, மாணவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. தற்காலிக சான்றிதழை வைத்தே, உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம். திருத்தம் செய்யப்பட்ட விவரத்தை, தேர்வுத் துறைக்கு அனுப்பி, அங்கிருந்து திருத்திய மதிப்பெண் பட்டியல் வந்தபின், அசல் மதிப்பெண் சான்று வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.