Breaking News

முதலிடம் பெற்றவர்களில் ஒருவர் மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்

பத்தாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்த 41 மாணவர்களில், பாரதிராஜா ஒருவர் மட்டுமே தமிழ் வழியில் பயின்ற மாணவர். அவர் பயின்ற பள்ளி, அவரது ஊர் பற்றிய விபரம்: அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகே சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள சிறு கிராமம். கங்கைகொண்டசோழபுரம் கோயில் கட்டப்பட்ட நேரத்தில் இங்கு கோயில் பணிக்காக பரண் அமைக்கப்பட்டதால் இந்த கிராமம் பரணம் என்று பெயர்பெற்றது. 


பரணம் என்று ஓர் ஊர் உள்ளதா என்றுகூட பலரும் அறியாத நிலையில், அந்த ஊரின் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர், முதலிடம் பெற்ற 41 மாணவர்களில் ஒருவராக தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார்.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 499 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற 41 மாணவர்களில் 40 பேர் தமிழை முதல் மொழிப் பாடமாக எடுத்து, மற்ற பாடங்களை ஆங்கிலத்தில் எழுதியவர்கள். மாணவர் பாரதிராஜா ஒருவர் மட்டுமே தமிழ் வழியில் பயின்ற மாணவர்.

பரணம் மிகவும் பின்தங்கியப் பகுதி. பெரும்பாலும் ஏழை விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகள்தான் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 117 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 12 பேர் 450-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 400-450க்குள் 38 பேர். அறிவியலில் 100 மதிப்பெண் பெற்றோர் 8 பேர், சமூக அறிவியலில் 5 பேர், கணிதத்தில் 2 பேர், ஆங்கிலத்தில் ஒருவர். அது பாரதிராஜா.

தனது வெற்றிக்குக் காரணம் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், தனது தாயின் ஈடுபாடும்தான் என்று அவர் தெரிவித்தார். 117 மாணவர்களுக்கும் காலை 8 மணி முதல் மாலை 6.30 வரை கூடுதலாக உழைப்பை இந்த பள்ளி ஆசிரியர்கள் நல்கியுள்ளனர். இந்த அர்ப்பணிப்புதான் இந்தக் கிராம மாணவர்களுக்கு ஊக்கமாக இருந்துள்ளது.

இந்தப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 படிக்க வேண்டும் என்றால் 5 கி.மீ. தொலைவில் உள்ள உடையார்பாளையம், அல்லது 7 கி.மீ. தொலைவில் உள்ள இரும்புலிக்குறிச்சி என்ற பகுதிக்குத்தான் செல்ல வேண்டும். பரணம் உயர்நிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த பல காலமாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை, பாரதிராஜாவின் "கவன ஈர்ப்பினால் தமிழக அரசின் பரிசாக இந்த கோரிக்கை நிறைவேறவும்கூடும்.