Breaking News

தற்காலிக பணிகளுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும், என, உத்தரவிடப்பட்டுள்ளது


பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில், அனைத்து தற்காலிக பணியிடங்களும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும், என, உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வித் துறையில் ஆசிரியர் தொடர்பான பணி நியமனங்கள், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், அலுவலர் தொடர்பான நியமனங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மூலமும் நடக்கின்றன.இந்த, இரண்டு அமைப்புகளிலும் வராத பல பணிகளுக்கு, துறை ரீதியாக, அரசுத் தேர்வுகள் துறை மூலமும், நேரடியாகவும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் மற்றும் தலைமைச் செயலர் அலுவலகத்தில் இருந்து, கல்வித் துறைக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 'அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக பணி நியமனங்களும், சம்பந்தப்பட்ட பணி நியமன அமைப்பு அல்லது துறைகள் மூலம், வேலைவாய்ப்பு பதிவு மூப்புப் பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அனைத்து பள்ளி, கல்லூரி துறை அதிகாரிகளும் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்திலுள்ள அனைத்து துறைகளிலும், நிரந்தர மற்றும் தற்காலிக நியமனங்கள், வேலைவாய்ப்பு பதிவு மூப்புப் பட்டியல் அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டுமென்று, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனவே, இனி தற்காலிக பணிகளுக்கும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புப் பட்டியல் பெற்று, அழைப்புகள் விடுக்கப்படும்.சம்பந்தப்பட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுகள் இல்லை என, வேலைவாய்ப்பு அலுவலகம் ஆணை அளித்தால் மட்டும், நேரடி நியமனம் நடக்கும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்