மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவுக்கு ஜூன் 17-ஆம் தேதிக்குள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாமகவின் மத்திய முன்னாள் ரயில்வே அமைச்சர் ஆர்.வேலு கடந்த 2011-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படுகிறது.இதில், தனியார் பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச்சட்டம் 1973-இன் கீழ் செயல்படுகிறது. அரசு, மாநகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் பொதுவான பாடத்திட்டம், பொதுத் தேர்வுகள்தான். தனியார் பள்ளிகள் தொடங்குவதற்கு தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறைச்சட்டம் இருக்கும் போது, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இது, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறுவதாகும். மெட்ரிகுலேஷன் பள்ளிகளை ஊக்கப்படுத்துவதற்காகவும், புதிய தனியார் பள்ளிகளை திறப்பதற்காகவும்தமிழக அரசு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளைக் கொண்டு வந்தது.எனவே, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளை சட்ட விரோதம் எனவும், செல்லாதது எனவும் அறிவிக்க வேண்டும். மேலும், இந்த விதிகளின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யவேண்டும் என மனுவில் கோரப்பட்டது.இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் கே.பாலு ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்டநடவடிக்கைகள் குறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் தற்போது அவகாசம் கோரப்படுகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணை ஜூன் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.