Breaking News

சி.பி.எஸ்.இ., 1ம் வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயம்: புத்தகம், ஆசிரியர்கள் இன்றி பள்ளிகள் மெத்தனம்

தமிழகத்தில், மத்திய பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ., அடிப்படையில் செயல்படும் பள்ளிகளில், தமிழ் பாடம் கட்டாயமாகும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், தமிழ் ஆசிரியர் இல்லாததால், தமிழை தனியாக, 'டியூஷனில்' படிக்க அறிவுறுத்துவதாக, புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், சமச்சீர் கல்வி அமலில் உள்ளது. இதனால், இப்பள்ளிகள் தமிழை கட்டாய பாடமாகக் கற்பித்து வருகின்றன. தமிழக அரசு, '2015 - 16 கல்வியாண்டு முதல், சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாகக் கற்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது. துவக்கத்தில், ஒன்றாம் வகுப்பு, அதன்பின் படிப்படியாக, ஒவ்வொரு வகுப்புக்கும் என தமிழ் கட்டாயமாக்கப்பட்டு, 2024 - 25ல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வேண்டும். இதற்கான அரசாணை, 2014 செப்., 18ல் வெளியிடப்பட்டது.கடந்த, ஏப்ரல் 1ம் தேதி முதல்
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் புதிய கல்வியாண்டு வகுப்புகள் துவங்கி விட்டன. இதில், தமிழக அரசாணையின் படி, ஒன்றாம் வகுப்புக்கு கட்டாய பாடமாக தமிழ் அறிமுகமாகியுள்ளது.
ஆனால், இன்னும் எந்தப் பள்ளியிலும், தமிழ் வகுப்பு துவங்கவில்லை. தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் தமிழ் புத்தகங்களை வாங்கவில்லை.
இதுகுறித்து, தமிழ்நாடுபாடநூல் கழக அதிகாரிகள் கூறும்போது, 'அனைத்து மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தமிழ் புத்தகங்களை, தமிழ்நாடு பாடநூல் கழக மண்டல அலுவலகங்களில் வாங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், பெரும்பான்மையான சி.பி.எஸ்.இ., பள்ளிகள் புத்தகம் வாங்கவில்லை' என்றனர்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தரப்பில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: தற்போது தமிழ் ஆசிரியர்களை தேடி வருகிறோம். ஒன்றாம் வகுப்புக்கு மட்டுமே பாடம் எடுக்க வேண்டும் என்பதால், குறைந்த ஊதியத்தில் தமிழ்
ஆசிரியர் கிடைக்கவில்லை. ஆசிரியரை நியமனம் செய்ததும், புத்தகங்கள் வாங்கி, தினமும் தமிழ் வகுப்பு துவங்கும்; அதுவரை, டியூஷனில்' தமிழ் கற்றுக் கொள்ள மாணவ, மாணவியரை அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் மெத்தனம்:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தமிழ் வகுப்புகள் துவங்கி விட்டதா என்பதை, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் மெத்தனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தமிழகத்தில் சமச்சீர் பாடத்திட்ட பள்ளிகளில் தேர்வுகள் நடப்பதாலும், பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தம் நடப்பதாலும், ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால், ஆய்வுக்கு செல்லவில்லை. விரைவில் அதிரடி ஆய்வு நடத்துவோம்' என்றனர்.