Breaking News

சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பள உயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் நேற்று சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதியை தலைமைச்செயலகத்தில் சந்தித்துபேசினார்கள். 


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–கடந்த 15–ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபட்டோம். வேலை நிறுத்தத்தை திரும்ப பெற்றுவிட்டு அமைச்சரை சந்தித்தோம். அப்போது அமைச்சர் கூறுகையில் சத்துணவு சமையல் உதவியாளர் 10 ஆண்டுகள் பணி முடித்திருந்தால் அவர்களுக்கு சம்பளத்தில் 3 சதவீத உயர்வும், 20 ஆண்டு பணி முடித்திருந்தால் அவர்களின் சம்பளத்தில் 3 சதவீத சம்பளமும் உயர்த்தப்படும் என்றும் கூறினார்.அப்படி சம்பளத்தை உயர்த்துவதால் சத்துணவு சமையல் உதவியாளர்கள் மாதம் ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பளம் கூடுதலாக பெறுவார்கள். இதற்காக தமிழக முதல்– அமைச்சருக்கும், சமூகநலத்துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், ஓய்வூதியம் கொடுக்கப்படவேண்டும், பணிக்கொடை ஆகிய 3 முக்கிய கோரிக்கைகளை அமைச்சரிடம் வைத்துள்ளோம். அவற்றை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். இவ்வாறு கே.பழனிச்சாமி தெரிவித்தார். பேட்டியின்போது பொதுச்செயலாளர் ராமநாதன், பொருளாளர் சுந்தராம்பாள் ஆகியோர் அருகில் இருந்தனர்.