Breaking News

கற்பித்தலில் புதுமை : தேவகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு



நடுநிலைப் பள்ளியில் காணொலி ஆவணப் படப் பிடிப்பு 
தமிழக அரசு ஏற்பாடு  

 

      தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் காணொலி ஆவணப் படம் எடுக்கபட்டது.   



                  தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகளின் படி கற்றல் கற்பித்தல் புதுமை புனைதல் மற்றும் கல்வி சார் கணினி வளங்கள்  சேகரிக்க  இணையதள பக்கத்தின் மூலம்  தமிழ்நாடு முழுவதிலும்  தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை உள்ள சுமார் ஐந்தரை லட்சம் ஆசிரியர்களில்  முதற்கட்டமாக 75 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.75 ஆசிரியர்களில்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஒருவர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்  தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை  சுமார் 1320 பள்ளிகளில் இப்பள்ளி ஒன்று  மட்டுமே  தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. புதுமை புனைதல் என்னும் பொது  தலைப்பின் கீழ் காணொலி ஆவணம் செய்யும் பொருட்டு இயக்குநரின்  ஆணைப்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனக் குழுவைச் சேர்ந்த படப்பிடிப்புக்குழு  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்  பள்ளிக்கு வருகை  புரிந்தனர். படப்பிடிப்பு குழுவை சார்ந்த பட  இயக்குனர் ஜெரோம், கேமராமேன்கள் ஆண்டனி மற்றும் ஜான் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர்,மாணவ,மாணவிகளிடம் காட்சிகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள்.பிறகு ஆவணப்படம் எடுக்கப்பட்டது.

                 பட இயக்குனர் பேச்சு

                                                       இது குறித்து பட இயக்குனர் ஜெரோம் கூறியதாவது,தமிழக அரசின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவன இயக்குனரின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியை அனுபவம் புதுமை என்கிற தலைப்பில் ஆவணப்படமாக எடுக்க இங்கு வந்துள்ளோம்.தமிழக அரசு  மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் கற்பித்தலில் புதுமைகள் செய்யும் ஆசிரியர்களை தேர்வு செய்து அதனை ஆவணப்படமாக எடுத்து வெளி உலகுக்கு ஆசிரியர்களின் பன்முக  திறமைகளை வெளி காண்பிக்கும்  நோக்கில் இதனை செய்து வருகிறது என்றும்,இது ஒரு புதிய முயற்சி என்றும் கூறினார்.
            தலைமை ஆசிரியர் பேச்சு

                    இது குறித்து தேர்வு பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறும்போது,  தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகளின் படி கற்றல் கற்பித்தல் புதுமை புனைதல் மற்றும் கல்வி சார் கணினி வளங்கள்  சேகரிக்க  இணையதள பக்கத்தின் மூலம் விண்ணப்பித்திருந்தேன்.தமிழ்நாடு முழுவதிலும் தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை உள்ள சுமார் ஐந்தரை லட்சம் ஆசிரியர்களில் முதற்கட்டமாக தேர்வாகி உள்ள 75  ஆசிரியர்களில் நானும் ஒருவன் என்கிறபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.மேலும் சிவகங்கை மாவட்டத்தில் முதற்கட்டமாக இப்பள்ளி மட்டுமே தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
                          
                       அனுபவம் புதுமை

                                           இப்போது இங்கு நடைபெற்றுள்ள காணொலி ஆவணப் படப் பிடிப்பு "அனுபவம் புதுமை" என்கிற தலைப்பில் படமாக்கபடுகிறது.இளம் மாணவர்களுக்கு கல்வியின் அனுபவம் புதுமையாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில் கடந்த ஓராண்டுக்கும் முன்பு இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி ஏற்றுக்கொண்டேன்.   
                 கற்றல் புதியது

                                   பொதுவாக மாணவர்களை வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைக்கக் கூடாது.மாணவர்களுடைய விசாலப் பார்வையானது புத்தகங்களுக்குள் மட்டும் முடிந்து விடக் கூடாது,அதையும் தாண்டி கற்றலானது ஒவ்வொரு விசயத்திலும் அனுபவமாக இருக்க வேண்டும்,புதியதாக இருக்க வேண்டும்,புதுமையானதாக இருக்க வேண்டும்.
   இசை ,நடனம் மூலம் புதுமை  கற்பித்தல்

                             இப்பள்ளியில் மாணவர்களுக்கு திருக்குறள்,அபிராமி அந்தாதி போன்றவற்றை இசையோடு நடனம் மூலம் புதிய முறையில் பல்வேறு கலைகளை கற்பித்து வருகிறோம்.கலைகளின் மூலம்  கற்கும் இளம் வயது மாணவர்கள் இது தொடர்பான வல்லுனர்கள் வரும்போது ஒன்றாம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு  மாணவ,மாணவியர் கூட அவர்களிடம் மிக எளிதாக கேள்விகள் கேட்டு பதில் பெறுவதை பார்த்து,இது தங்கள் அனுபவத்தில் புதுமையாக உள்ளது எனக் கூறி வல்லுனர்கள்  வியப்பில் செல்கின்றனர். மாணவர்களுக்கு பல்வேறு துறைகளிலும் உள்ள நிபுணர்களை பள்ளிக்கே வரவழைத்து குறிப்பாக தமிழக புள்ளியல் துறையின் முதன்மை செயலர் இறையன்பு இ .ஆ.ப.,தேவகோட்டை உதவி கலெக்டர் சிதம்பரம்,கணேசன், தமிழ்நாடு மின்சார துறை பொறியாளர் சந்திரசேகர்,பொம்மலாட்ட ஆசிரியர் தாமஸ் ஆண்டனி ,திருக்குறள் நடனம் சொல்லும் சுந்தர மகாலிங்கம்,தமிழ்நாடு அறிவியல் மையத்தின் திருச்சி அண்ணா கோளரங்க இயக்குனர் லெனின் தமிழ் கோவன் உட்பட பல்வேறு நிபுணர்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி  புதிய அனுபவத்தை வழங்கியதுடன் அவர்களிடம் பேசியவர்களுக்கும் புதிய அனுபவம் கிடைத்ததாக கூறி செல்கின்றனர்.

        தினம்தோறும் அனுபவ கற்றல் 

                            இப்பள்ளியில் பயின்று வரும் இளம் வயது மாணவர்களுக்கு கல்வியை அனுபவத்தோடு கற்று கொடுத்து வருகிறோம்.கற்றலை அனுபவத்தோடு கற்கும்போது வாழ்க்கையின் எந்த சுழலிலும் மறக்காது.வாழ்க்கையின் என்றுமே மறக்க கூடாது என்ற நோக்கில் தான் கல்வி சார்ந்த நிறைய நிகழ்வுகளை பள்ளியிலும் ,களப்பயணமாக புத்தக திருவிழா,அஞ்சலகம்,வங்கி,நூலகம்,அறிவியல் கல்லூரி ஆய்வகங்கள் என முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்று வெளியிலும் கற்றலின் அனுபவத்தை புதுமையாக்கி வருகின்றோம் .மாணவர்களுக்கு புதிய ,புதிய அனுபவங்களை தினம்தோறும் கற்று கொடுத்து வருகிறோம். 

  நேரடியாக மாணவர்களை தேடி செல்லல்

                   எந்த விதமான ஏற்ற தாழ்வுகளும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் அமைக்கப்பட்டது தான் பள்ளிக் கூடம்.தமிழக அரசின் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடியாக சமுதயாத்தில்  மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிகுறவ சமுதாய இன மக்கள்,ஜோசியம் பார்க்கும் சமுதாய இன மக்கள் என அவர்களின் இருப்பிடம் தேடி சென்று கலை நிகழ்ச்சிகள் வாயிலாக கல்வியின்  புதிய அனுபவத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி  அவர்கள் பிள்ளைகளையும் இப்பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறோம் என்பதை பெருமையுடன் சொல்ல முடியும்.

வார,வாரம் மற்றும் மாத திருவிழாக்கள் 

                       இப்பள்ளியில் வாரா,வாரம் மாணவர்களுக்கு பேச்சு,கவிதை,ஓவியம்,மனக்கணக்கு ,புதிர்கணக்கு,வாசிப்பு போன்று பல்வேறு தலைப்புகளில் போட்டிகளை மாதம் ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதனை வாரம்தோறும் போட்டியாக நடத்தி மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறோம்.  மேலும் மாதா,மாதம் பாடங்கள் சார்ந்த வினாடி வினா மாதம் ஒரு பாடம் என எடுத்துக் கொண்டு மாத கடைசியில் போட்டிகள் நடத்தி வருகிறோம்.இதனில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் பங்கு கொண்டு வெற்றி பெற்று பரிசு பெறுகின்றனர்.ஒரு முறை பரிசு பெற்ற மாணவர் அடுத்த முறை பார்வையாளராக  மட்டுமே இருக்க முடியும் என தெரிவித்துள்ளதால் அனைத்து மாணவர்களும் போட்டிகளில் கண்டிப்பாக பங்கெடுத்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்களின் இளம் வயது மனதில் விதைத் துள்ளோம்.இத்திருவிழாக்கள் மாணவர்கள்  மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மாணவர்களின் திறமைகளை ஊடகங்களின் வாயிலாக வெளிபடுத்துதல் 
                        இப்பள்ளி மாணவர்கள் தாங்கள் பெற்ற அனுபவத்தை நாளிதழ்களில்,வார இதழ்களில் ,மாத இதழ்களில்,வானொலி,தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக கட்டுரைகளாக ,கவிதைகளாக,ஓவியமாக ,கதைகளாக தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.



ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி


இதற்காக தமிழக அரசுக்கும்,பள்ளி நிர்வாகத்துக்கும்,சென்னையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற கற்றல் கற்பித்தல் புதுமை மற்றும் கல்விசார் கணினி வளங்கள் சேகரித்தல் பணிமனையின்  பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் DIET விரியுரையாளர் ஜூலியஸ், காணொளி வடிவமைத்தல் குறித்து தெளிவாக எடுத்து கூறிய ரெஜி ,ஆவணப் பட இயக்குனர் ஜெரோம்,ஆசிரியைகள்  சித்ரா குமரேசன்,உமா மகேஸ்வரி ,ஆசிரியர் அன்பழகன் ,எனது குழு ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியை சப்ரன் பானு, எனது குடும்பத்தினர்,நான் பணி ஆற்றும் பள்ளியின் ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவர்கள்,பெற்றோர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனம் சார்பாக காணொலி ஆவணப் படப் பிடிப்பு நடை பெற்றது.
நன்றி- குருகுலம்