Breaking News

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம்


தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்ற 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை பற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் புதிதாக ஆய்வக உதவியாளர்கள் 4 ஆயிரத்து 362 பேர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- ஆய்வக உதவியாளர்களை தேர்ந்து எடுப்பதற்காக அரசு தேர்வுகள் இயக்குனரகம் தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஒரே எழுத்துத்தேர்வை நடத்த உள்ளது. அந்த தேர்வின் வினாக்கள் 10-வது வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும்.
அதாவது கொள்குறி வினாக்கள் கொண்ட விடைத்தாள் தயார் செய்து ஓஎம்ஆர் ஷீட் மூலம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் வகையில் போட்டித்தேர்வு நடத்தப்படும். தேர்வு நடத்தி மதிப்பெண்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தி 1:5 என்ற விகிதத்தில் தேர்வு எழுதுபவர்களை தேர்ந்து எடுக்கவேண்டும். அந்த தேர்வில் 1:5 என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள், மாவட்ட அளவில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 25 மதிப்பெண்கள் நேர்முகத்தேர்வை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி, தலைமையிடத்து மாவட்ட கல்வி அதிகாரி, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ஆகியோரைக்கொண்ட குழு அமைக்கப்படும்.
நேர்முகத்தேர்வில் வழங்கப்படவேண்டிய மொத்த மதிப்பெண்கள் 25 அதன் விவரம் வருமாறு:-
வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கு அதிக பட்சம் 10 மதிப்பெண் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் முடியகாத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண், 2 ஆண்டு முதல் 4 ஆண்டுகள் முடிய காத்திருப்பவர்களுக்கு 4 மதிப்பெண்கள், 4 ஆண்டு முதல் 6 வருடங்கள் முடிய காத்திருப்பவர்களுக்கு 6 மதிப்பெண், 6 முதல் 8 வருடங்கள் முடிய காத்திருப்பவர்களுக்கு 8 மதிப்பெண், 10 வருடங்களும் அதற்கு மேலும் காத்திருப்பவர்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படவேண்டும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருந்தால் 2 மதிப்பெண், இளங்கலைபட்டம் மற்றும் அதற்கு மேல் படித்திருந்தால் 3 மதிப்பெண். அனுபவ சான்றுக்கு 2 மதிப்பெண் தனியார் மற்றும் அரசு பள்ளி அல்லது கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்ததற்கான சான்று இருந்தால் அதற்கு 2 மதிப்பெண் உண்டு. மேலும் நேர்முகத்தேர்வுக்கு 8 மதிப்பெண் உண்டு.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.