Breaking News

மே மாதத்தில் 650 தலைமை ஆசிரியர் ஓய்வு: காலியிடங்களை பிடிக்க வசூல் வேட்டைக்கு வாய்ப்பு.மே மாதத்தில் 650 தலைமை ஆசிரியர் ஓய்வு: காலியிடங்களை பிடிக்க வசூல் வேட்டைக்கு வாய்ப்பு.

அரசுப் பள்ளிகளில், 650 தலைமை ஆசிரியர்கள், மே மாதத்துடன் ஓய்வு பெற உள்ளனர். அந்த இடங்களை பிடிக்க ஆசிரியர்களிடம் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் சிபாரிசை நாடி வருகின்றனர்.



உயர்நிலைப் பள்ளிகளில், 190; மேல்நிலைப் பள்ளிகளில், 460 தலைமை ஆசிரியர்கள் மே மாதத்துடன் ஓய்வு பெற உள்ளனர். இதற்கான பட்டியலை, பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் தயாரித்துள்ளது. இதேபோல், தலைமை ஆசிரியர் பதவியை பெறுவோருக்கான பணி மூப்பு பட்டியலையும் உருவாக்கியுள்ளது.இப்பட்டியல், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை பள்ளிகள் வாரியாக, தோராய அடிப்படையில்
ஒதுக்கீடு செய்யும் பணி நடக்கவுள்ளது. இதேபோல், பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களின் காலியிட பட்டியலும் தயாரிக்கப்படுகிறது.

முயற்சி:
காலியாகும் தலைமை ஆசிரியர்களின் பதவிகளை பிடிக்கவும், தேவையான
மாவட்டங்களில் அவற்றை மாற்றவும், ஆசிரியர்கள் பலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதேபோல், பதவி உயர்வால் காலியாகும் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு இடமாற்றம்பெறவும், பதவி உயர்வைப் பெறவும், மற்றொரு தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.

புரியாத புதிர்:
இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:ஓய்வு பெறும்

தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப புதிய பட்டியல் தயாரிக்கப்படுகிறது. யாருக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. தோராயப் பட்டியல் தயாரிக்கப்பட்டாலும், எந்த இடம் தங்களுக்கு வேண்டும் என்று, ஆசிரியர்கள் பலர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்களின் அலுவலக ஊழியர்கள், பள்ளிக்கல்வித் துறையின் உயரதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு வேண்டியவர்கள்மற்றும் சங்க நிர்வாகிகளை நாடி வருகின்றனர்.இதில், மறைமுகமாக வசூல் வேட்டை நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, 'பணி மூப்பு, பதவி மூப்பு அடிப்படையில், கலந்தாய்வு மூலம் மட்டுமே காலியிடங்கள் நிரப்பப்படும்; சிபாரிசுகள் ஏற்கப்படாது' என்பதை, அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஆசிரியர்கள் பலர் வட்டிக்குக் கடன் வாங்கி, சிபாரிசு செய்வோருக்கு கொடுக்கும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.