தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 30 பி.எட். ஆசிரியர்
பயிற்சி கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு பல்கலைக்கழகத்திற்கு
விண்ணப்பித்துள்ளனர். பி.ஏ., பி.எஸ்.சி. பட்டபடிப்பு படித்து முடித்தவர்கள்
உடனே பி.எட் ஆசிரியர்கள் பயிற்சியை தேர்வு செய்வார்கள். இந்த பயிற்சியை
முடிந்தால்தான் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்ற முடியும்.
மேலும் தற்போது தகுதித்தேர்வில் வெற்றி
பெற்றால்தான் அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை என்ற நிலை ஆகி விட்டது. அதனால்
பி.எட் படிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக பெண்கள் ஆசிரியர் பயிற்சியை அதிகளவு
விரும்பி சேருகிறார்கள். குறைந்த செலவில் ஆசிரியர் பயிற்சியை முடித்து
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் எந்த செலவு இல்லாமல் அரசு பணியில் சேர
முடியும் என்ற நம்பிக்கை நகர்ப்புற மாணவர்களை காட்டிலும் கிராமப்புறங்களில்
அதிகமாக மேலோங்கி உள்ளது.
தமிழகத்தில் 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும்
கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர தனியார் சுயநிதி
கல்வியியல் கல்லூரிகள் 668 உள்ளன.
இந்த கல்வியாண்டில் மேலும் 30 பி.எட்
கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார். அவர் மேலும்
கூறியதாவது:–
புதிய கல்லூரிகள் அனுமதி கேட்ட விண்ணப்பங்கள்
பரிசீலனை செய்யப்படுகின்றன. அந்த கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு
கட்டமைப்பு வசதி இருக்கும் பட்சத்தில் அனுமதிக்கு பரிந்துரைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்
சார்பாக விளையாட்டு, கலாசார போட்டி, மாவட்ட, மண்டல அளவில் நடைபெற்று
முடிந்தன. இதற்கான பரிசளிப்பு விழா துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில்
சேத்துப்பட்டில் நடந்தது.
இதில் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு–பதக்கங்களை வழங்கினார்.
மேலும் மாநில அளவிலான போட்டி சேத்துப்பட்டு
விளையாட்டு அரங்கத்தில் வருகிற 10–ந் தேதி நடக்கிறது. முடிவில் வெற்றி
பெற்றவர்களுக்கு அமைச்சர் பழனியப்பன் பரிசு வழங்குகிறார்.
செயலாளர் அபூர்வா, செந்தமிழன் எம்.எல்.ஏ., சிண்டிகேட் உறுப்பினர் நரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை துணைவேந்தர் ஜி.விஸ்வ நாதன் தலைமையில் பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.