Breaking News

கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக 10 ஆசிரியர்கள் தேர்வு

கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆசிரியர்களை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இவர்களது கற்பித்தல் முறைகளை, இணையதளத்தில் பதிவேற்றவும், அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறையை வித்தியாசப்படுத்தவும்; ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவும், பள்ளிக் கல்வித்துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளை விட, அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்த, புதிய முயற்சி ஒன்றை, மாநில கல்வி யியல் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கற்பித்தலில் புதுமையை புகுத்தும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இணையதளத்தில், வீடியோவாக வெளியிட, முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, மாநிலம் முழுவதும், 1,526 ஆசிரியர்கள், தங்களின் கற்பித்தல் முறைகளை விளக்கி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விண்ணப்பித்தனர். இதில், கற்றலில் புதுமையை புகுத்திய 100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்டமாக, 75 ஆசிரியர்களின் கற்பித்தலை, வீடியோ எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதைப் பார்த்து, மற்ற ஆசிரியர்களும் பின்பற்ற வாய்ப்புள்ளது என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் நம்புகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், உத்திரமேரூர், நெல்லிக்குப்பம், நல்லம்பாக்கம், தென்மேல்பாக்கம், ஓனம்பாக்கம், குருவிமலை, கருநிலம், கொளத்துார், ஆத்தனஞ்சேரி, மதுரமங்கலம் ஆகிய 10 அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை, எட்டு ஆசிரியர்களின் கற்பித்தல் முறை, வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில், மீதமுள்ள இரண்டு ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளை, வீடியோவாக பதிவு செய்து முடிக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.