பிளஸ்–2 வேதியியல் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 2 ஒரு மதிப்பெண்
கேள்விகளுக்கு கொடுக்கப்பட்ட விடைகளில் ஏதாவது ஒரு விடையை எழுதியிருந்தால்
மதிப்பெண் உண்டு என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பிளஸ்–2 தேர்வு
தமிழ்நாடு முழுவதும் கடந்த(மார்ச்) மாதம் 5–ந்தேதி பிளஸ்–2 தேர்வு
தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள்.
தேர்வு மார்ச் 31–ந்தேதியுடன் முடிவடைந்தது. தற்போது எஸ்.எஸ்.எல்.சி.
தேர்வு நடைபெற்று வருகிறது. வருகிற 10–ந்தேதி தேர்வு முடிகிறது.
பிளஸ்–2
தேர்வை பொருத்தவரை தமிழ் முதல் தாள், தமிழ் 2–து தாள், ஆங்கிலம் முதல்
தாள், ஆங்கிலம் 2–வது தாள் ஆகிய தேர்வுகளின் விடைத்தாள்கள் மதிப்பீடு
செய்யப்பட்டுவிட்டன.
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்,
விலங்கியல், தாவரவியல், அக்கவுண்டன்சி, பொருளாதாரம், வர்த்தக கணிதம்
உள்ளிட்ட தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி உள்ளது.
கமிட்டி
விடைத்தாள் திருத்தும் முன்னதாக ஒவ்வொரு பாடத்தேர்விற்கும்
நிபுணர்கள் கொண்டு கமிட்டி அமைக்கப்பட்டு அவர்கள்தான் சரியான விடையை
தேர்ந்து எடுப்பார்கள். அந்த விடைகளை கொண்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய
ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிடும்.
அதன்படி
பொருளாதார தேர்வில் 18 மற்றும் 20 ஆம் நம்பர் கேள்விகளுக்கு விடை அளிக்க
முயற்சி செய்தால் தலா ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர்களிடம் அரசு
தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
வேதியியல் தேர்வில் 2 மதிப்பெண்
மருத்துவம், என்ஜினீயரிங், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கு செல்ல வேதியியல் தேர்வின் மதிப்பெண் முக்கியம்.
அதன்படி
இந்த வருடம் வேதியியல் தேர்வில் 10–வது மற்றும் 22–வது எண்ணுள்ள கேள்விகள்
ஆப்ஜெக்டிவ் கேள்விகள் ஆகும். அதாவது ஒரு கேள்விக்கு 4 விடைகள்
அளிக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்று சரியானதாக இருக்கும்.
ஆனால்
தேர்வில் 10 மற்றும் 22 ஆகிய இரு கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட 4 விடைகளும்
தவறானவை. எனவே அந்த 2 கேள்விகளுக்கும் வினாவில் கொடுக்கப்பட்ட தவறான
விடைகளில் ஏதாவது ஒன்றை எழுதியிருந்தால் அந்த மாணவர்களுக்கு மதிப்பெண்
உண்டு என்று விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை
உத்தரவிட்டுள்ளது