Breaking News

74 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு ஜூன் 15-க்குள் அறிவிக்கை வெளியாகும்.

74 பணியிடங்களுக்கான குரூப்-1 புதிய தேர்வு அறிவிக்கை ஜூன் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி பொறுப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சித்தா, யுனானி, ஆயுர்வேதம் ஆகிய பிரிவுகளில் 83 துணை மருத்துவர் காலி பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்வை 3 ஆயிரத்து 695 பேர் எழுதினர். 


சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 நகரங்களில் 15 இடங்களில் இத்தேர்வு நடைபெற்றது. சென்னையில் ஆயிரத்து 798 பேர் இதனை எழுதினர். எழும்பூர் மாநில மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை டிஎன்பிஎஸ்சி பொறுப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் ஷோபனா பார்வையிட்டனர். அப்போது பாலசுப்ரமணியன் கூறியதாவது: 19 மாவட்ட துணை ஆட்சியர் பணியிடங்கள், 26 டிஎஸ்பி பணியிடங்கள், 21 உதவி ஆணையர் (வணிகம்) பணியிடங்கள் மற்றும் 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய 74 பணியிடங்களுக்கான குரூப் I தேர்வு அறிவிக்கை ஜூன் மாதம் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட குரூப் I மெயின் தேர்வு ஜூன் மாதம் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை 4 ஆயிரத்து 389 பேர் எழுதுகின்றனர். மே 29-ம் தேதி கடைசிநாள் வரை குரூப் II தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆயிரத்து 241 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. குரூப் IV சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 15-ம் தேதி தொடங்கும். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. நேர்முகத் தேர்வுகள் கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.