தமிழகத்தின் உயர் கல்வித் தரத்தைப்
பாதுகாக்கும் வகையில், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும்
என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக
அந்த அமைப் பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் நோக்கில், தனியார்
பள்ளிகளில் பிளஸ் 1 பாடத்தை நடத்தாமல் தவிர்த்துவிட்டு, பிளஸ் 2 பாடங்களை
மட்டும் நடத்துவதால் பொறியியல் முதலாண்டு பருவத் தேர்வுகளில் மாணவர்கள்
தோல்வி அடைகிறார்கள் என்பதை அண்ணா பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.
இன்று, பெரும்பாலான ஏழை மாணவர்கள் அரசுப்
பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடங் களை உரிய வகுப்புகளில் படித்து
தேர்வு எழுதுகிறார்கள். ஆனால், தனியார் பள்ளி மாணவர்களோ, பிளஸ் 1 வகுப்பில்
இருந்தே பிளஸ் 2 பாடங்களைப் படித்து, பொதுத்தேர்வில் அரசுப் பள்ளி
மாணவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். இதன் காரணமாக உயர்
கல்விச் சேர்க் கையில் அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்கள் தங்களது
வாய்ப்பை இழந்துவருகிறார்கள். தனியார் பள்ளிகளில் மதிப் பெண் பெறவைக்கும்
முறைகேடு களைத் தடுப்பதற்கு தமிழக அரசின் கல்வித் துறை இதுவரை எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 பாடங்கள்
முறையாகக் கற்பிக்கப்படாததால் ஆண்டுதோறும் ஐஐடி நுழைவுத் தேர்வுகளில்
தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே
வருகிறது. ஆந்திர மாநிலத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில்
பத்தில் ஒரு சதவீதத்தினர்கூட இந்தக் கல்வி யாண்டில் தமிழகத்தில் தேர்ச்சி
பெறவில்லை. ஆந்திர மாநிலத்தவரின் தேர்ச்சி அதிகமாக இருப்பதற்கு அங்கு
பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுவதே காரணம். தமிழக அரசு
இதைத் தீவிரமாகக் கவனத்தில்கொண்டு, நடப்புக் கல்வி ஆண்டிலேயே பிளஸ் 1
வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.