பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அதிகாரிகள் பதவிக்கு, பதவி உயர்வு மூலம், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், கலந்தாய்வு மூலம் ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுவர்; இந்த ஆண்டு, கலந்தாய்வு தாமதமாகிறது. எனினும், நீண்டகாலமாக காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவில், 'உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில், மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு ஈடாக பணியாற்றுபவர்களின் பட்டியலை, மாவட்ட வாரியாக தயாரித்து அனுப்ப வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.