தமிழக பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும்
வாரத்தில் 2 நாள் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில்,
மதிய உணவு இடைவேளைக்கு முன்பு மாணவர்களுக்கு யோகா தொடர்பான பயிற்சிகளை 10
முதல் 20 நிமிடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி 1 முதல் 5ம்
வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உணவு இடைவேளைக்கு முன்பு 10 நிமிடங்கள் யோகா
பயிற்சியும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு காலை இறைவணக்கத்தை தொடர்ந்து 5
நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம் கற்றுத்தரவும் முடிவு
செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் 2012ல்,
மதிய உணவு இடைவேளைக்கு முன்பு எளிய முறை உடற்பயிற்சிகளை மாணவர்களுக்கு
கற்றுத்தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி யோகா உள்ளிட்ட பல்வேறு எளிய
உடற்பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன. யோகா மட்டும் கற்றுத்தரப்பட
வேண்டும் என சமீபத்தில் எந்த உத்தரவும் வரவில்லை’ என தெரிவித்தனர். பள்ளி
ஆசிரியர் சங்க வட்டாரங்கள் கூறுகையில், ‘உணவு இடைவேளையில் எளிய உடற்பயிற்சி
கற்றுத்தரவேண்டும் என வாய்மொழியாக ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால்,
இதை சில பள்ளிகள் பின்பற்றாததற்கு இடைவேளை 40 நிமிடம் மட்டுமே என்பதே
காரணம்’ என்றனர்.