நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர்,
ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள கல்வியியல் கல்லூரிகளின்
முதல்வர்கள், தாளாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.
இதில் தமிழக கல்வியியல் கல்லூரி பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கலந்து
கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தேசிய கல்வியியல் கல்லூரி கவுன்சில் பி.எட்,
எம்.எட்., படிப்புகளை 2 ஆண்டுகளாக தரம் உயர்த்த உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் பி.எட், எம்.எட்.படிப்புகள் 2 ஆண்டுகளாக தரம்
உயர்த்தப்பட்டுள்ளது. எனவே கல்லூரியில் என்னென்ன வசதிகளை மாணவர்களுக்கு
செய்ய வேண்டும் என்றும் பாட திட்டங்களை எப்படி வகுத்து நடத்திட வேண்டும்
என்று பயிற்சியளிக்கப்படுகிறது. ஒரு கல்லூரியில் குறைந்த பட்சம் 16
பேராசிரியர்கள் இருக்க வேண்டும். கல்லூரி 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்
இருக்க வேண்டும். விடுதி வசதி முன்பு இருந்தது போல் 2 மடங்காக இருக்க
வேண்டும்.
பி.எட்.படிப்புக்கு முதலாமாண்டு 7 படங்கள்
இருந்தது. தற்போது முதலாமாண்டுக்கு 9 படங்களும், இரண்டாமாண்டுக்கு 7
பாடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.எட்.படிப்பில் முதலாமாண்டு 6 பாடங்கள்,
இரண்டாமாண்டுக்கு 6 பாடங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சிறந்த கல்வி கொடுப்பதற்காக
இந்தாண்டு முதல் யோகா, கலாச்சாரம், தகவல் தொடர்பு ஆகிய பாடங்கள்
சேர்க்கப்பட்டுள்ளது. இசை, ஓவியம், நடனம் கூடுதல் பாடங்களாக
சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்பிக்கும் திறன்
அதிகரிக்கும். செய்முறை பயிற்சி வகுப்பு 40 நாட்களில் இருந்து 100 நாட்களாக
அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பதிவாளர் கலைசெல்வன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.