Breaking News

சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகளை பெற சுய சான்றளிக்கப்பட்ட சாதி சான்றிதழ் போதுமானது: மத்திய அரசு அறிவிப்பு

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் சமூகத்தினரை சிறுபான்மையினராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இத்தகைய சிறுபான்மையினருக்காக மத்திய-மாநில அரசுகள் அவ்வப்போது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன.  
   

அரசுகள் வழங்கும் இந்த பயன்களை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கும் ‘சிறுபான்மையினர் சான்றிதழ்’ அவசியமாக இருந்தது. இது சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சான்றிதழ் இல்லாததால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இருந்து பல்வேறு நலத்திட்டங்களின் பயன்கள், உதவிகளை பெற முடியவில்லை என சிறுபான்மையினர் ஏராளமான புகார்களை கூறி வந்தனர். குறிப்பாக ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி புகார் அளித்தனர்.         

இதைத்தொடர்ந்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம், இந்த பிரச்சினையில் நடவடிக்கையை எடுத்து உள்ளது. அதன்படி, ‘அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு சிறுபான்மையினர் சான்றிதழ் அவசியம் இல்லை. மாறாக சுய சான்றளிக்கப்பட்ட சாதி சான்றிதழ் மட்டும் போதுமானது’ என அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.   
      
முன்னதாக சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்காக சாதி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் பெறுவதற்கு வழங்க வேண்டிய உறுதிமொழி பத்திரத்தையும், கடந்த ஆண்டு மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டது. சாதி சான்றிதழ் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட மாணவரின் சுய கையொப்பமிடப்பட்ட சான்றே போதுமானது என அறிவிக்கப்பட்டு இருந்தது. சிறுபான்மையின மக்களின் சமூக பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.