Breaking News

அன்று குழந்தைதொழிலாளி , இன்று டாக்டர் .

குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு பெற்றோருடன் கட்டடத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர், இன்று மருத்துவப் படிப்பில் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.
 தருமபுரி மாவட்டம், பாலக்கோடைச் சேர்ந்த மீட்கப்பட்ட சிறார் தொழிலாளி கார்த்திக்தான் அவர். மருத்துவப் படிப்புக் கலந்தாய்வில் வியாழக்கிழமை பங்கேற்ற அவருக்கு சேலத்தில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்துள்ளது.
 சட்டப்படி 14 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களைப் பணிக்கு அமர்த்தக் கூடாது என்றபோதும், குடும்பச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு பல்வேறு பணிகளுக்குச் சென்று விடுகின்றனர். இவர்களை மீட்டு மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் சிறந்த பணியை தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
 இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 10,000 பேர் தமிழகம் முழுவதும் உள்ள 330 பள்ளிகளில் இப்போது படித்து வருகின்றனர். இவர்களில் 597 பேர் அண்மையில் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதி, அதில் 579 பேர் தேர்ச்சியும் பெற்றனர்.
 தேர்ச்சி பெற்றவர்களில் 23 பேர் 1200-க்கு 1000-க்கு மேல் மதிப்பெண் பெற்றும், 64 பேர் 900-க்கும் மேல் மதிப்பெண் பெற்றும் சாதனை படைத்தனர்.
 இதில் கட்டடத் தொழிலில் இருந்து குழந்தைத் தொழிலாளியாக கடந்த 2007-இல் மீட்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்ட தருமபுரி மாவட்டம், பாலக்கோடைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாணவர் பொதுத் தேர்வில் 1200-க்கு 1156 மதிப்பெண்கள் பெற்று, குழந்தைத் தொழிலாளர்களிலேயே முதல் மாணவராக சாதனை படைத்தார்.
 அப்போது, "மருத்துவப் படிப்பில் சேர்ந்து, ஏழைகளுக்கு சேவை செய்வதே எனது லட்சியம்' என தனது ஏக்கத்தை வெளிப்படுத்தினார். இப்போது அந்த லட்சியத்தையும் அடைந்து சாதனை படைத்திருக்கிறார் அவர். இதுகுறித்து மாணவர் கார்த்திக் கூறியது:
 நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அன்று எனக்கு 8 வயது. அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பெற்றோர் கட்டடத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கூலி வேலை என்பதால், தொடர்ச்சியாக வேலையும் கிடைக்காது, வருவாயும் இருக்காது. ஒரு வேளை உணவுக்கே சிரமமான நிலை. வேறு வழியின்றி, 4 ஆம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெற்றோருடன் கட்டட கூலி வேலைக்குச் சென்றேன். இதனால் குடும்ப தின வருவாயில் கூடுதலாக ரூ. 50 கிடைத்தது.
 அப்போதுதான், நாங்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்த கட்டுமான இடத்துக்கு வந்த நான்கு, ஐந்து பேர், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்கள் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, என்னையும் எனது பெற்றோரையும் எங்கேயோ அழைத்துச் சென்றனர்.
 பின்னர்தான் நான் மீண்டும் பள்ளிக்கு போகப் போகிறேன் என்று புரிந்தது. மனதுக்குள் சிறு மகிழ்ச்சி. பெற்றோரும் கட்டட கூலித் தொழிலை கைவிட்டு, தள்ளு வண்டியில் பாத்திர வியாபாரம் செய்யத் தொடங்கினர்.
 நான் மீண்டும் பள்ளிக்குச் செல்வதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி. நன்கு படித்து, டாக்டராகி, ஏழைகளுக்குச் சேவை செய்யவேண்டும் என்றார் தந்தை.
 அதையே லட்சியமாக எடுத்துக்கொண்டு படித்தேன். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 475 மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1200-க்கு 1156 மதிப்பெண்கள் பெற்றேன்.எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த எனக்கு மருத்துவ கட்-ஆஃப் 194.25 ஆக இருந்தது.
 நம்பிக்கை பிறந்தது. அதே நம்பிக்கையோடு மருத்துவக் கலந்தாய்வில் வியாழக்கிழமை பங்கேற்றேன். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
 சிரமமான குடும்பச் சூழலில் வளர்ந்ததால், வறுமை என்றால் என்ன என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். எனவே, எம்.பி.பி.எஸ். முடித்து இருதய நிபுணராகி நிச்சயம் ஏழைகளுக்காகப் பணியாற்றுவேன் என்கிறார் கார்த்திக்.