பிளஸ்-2 விடைத்தாள் மறு கூட்டல், மறுமதிப்பீடு
சரியாக செய்யவில்லை என்று மாணவ- மாணவிகள் நேற்று அரசு தேர்வுகள் இணை
இயக்குனர் அமுதவல்லியிடம் புகார் தெரிவித்தனர்.
மறுகூட்டல், மறுமதிப்பீடு
கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு நடைபெற்றது.
8 லட்சத்து 82 ஆயிரத்து 260 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு மே
மாதம் 7-ந் தேதி வெளியிடப்பட்டது. முடிவு பார்த்தபோதே அவர்கள் எடுத்த
மதிப்பெண்களும் தெரிந்துவிட்டது.
மதிப்பெண் அதிகம் எதிர்பார்த்த மாணவ-மாணவிகள் 1
லட்சத்து 566 பேர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். மறுகூட்டலுக்கு
மட்டும் 2835 பேரும், மறு மதிப்பீடு கோரி 3 ஆயிரத்து 502 பேரும்
விண்ணப்பித்தனர். மொத்தத்தில் 6337 பேர் விண்ணப்பித்தனர். மறு கூட்டல்
மற்றும் மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு இணையதளத்தில்
முடிவு வெளியிடப்பட்டது.
கல்வித்துறை அதிகாரியிடம் புகார்
இந்த நிலையில் மறு கூட்டல் மற்றும் மறு
மதிப்பீடு சரியாக செய்யவில்லை என்றும், அவ்வாறு சரியாக செய்திருந்தால்
மருத்துவ படிப்பில் இடம் கிடைப்பதற்கான கட்-ஆப் மதிப்பெண் கிடைத்திருக்கும்
என்றும் கூறி சில மாணவ-மாணவிகள் நேற்று அரசு தேர்வுகள் இயக்குனர்
கு.தேவராஜனை சந்திக்க சென்றனர்.
ஆனால் அவர் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு சென்றுவிட்டதால் இணை இயக்குனர் அமுதவல்லியை சந்தித்து புகார் தெரிவித்தனர்.
20 மதிப்பெண் கூடுதலாக கிடைக்க வேண்டும்
புகார் தெரிவித்த மாணவ-மாணவிகளில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவர் கூறியதாவது:-
நான் கணிதம், வேதியியல் பாடங்களில் தலா
200-க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளேன். இயற்பியல் தேர்வில் 200-க்கு 199
மதிப்பெண் பெற்றுள்ளேன். நான் மிகவும் பிற்பட்டோர் பிரிவில் உள்ளதால்
எனக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில்
மெக்கானிக் கல் பிரிவில் இடம் கிடைக்கும்.
மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் குறைந்துள்ளது.
தாவரவியல் பாடத்தில் 75-க்கு 75 மதிப்பெண் பெற்றுள்ளேன். ஆனால் விலங்கியல்
பாடத்தில் 75-க்கு 52 மதிப்பெண்தான் போடப்பட்டுள்ளது. ஆனால் நான் விலங்கியல
தேர்வில் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடை எழுதி உள்ளேன். பாட
புத்தகத்தில் உள்ள விடையை அப்படியே எழுதியும் ஒவ்வொரு கேள்விக்கும்
போடவேண்டிய மதிப்பெண்ணை விட ஒரு மதிப்பெண் குறைவாகத்தான் போடப்பட்டுள்ளது.
அவ்வாறு எனக்கு 20 மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. எப்படியும் 75-க்கு
குறைந்த பட்சம் 72 மதிப்பெண்ணாவது போடவேண்டும்.
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தும் எனக்கு
மாற்றம் இல்லை என்றுதான் வந்துள்ளது. சரியாக மறுமதிப்பீடு செய்யவில்லை. இது
குறித்து எப்படியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்.
இவ்வாறு அந்த மாணவர் தெரிவித்தார்.
மறுகூட்டலில் விடுபட்டுள்ளது
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர்
கூறுகையில், விலங்கியல் தேர்வில் மறு கூட்டலில் 3 மதிப்பெண்
விடுபட்டுள்ளது. அந்த மதிப்பெண் போட்டால் மருத்துவ கட்-ஆப் மதிப்பெண்
உயர்ந்து கண்டிப்பாக எனக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துவிடும்
என்றார்.
தருமபுரி மாட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர்
கூறுகையில், வர்த்தக கணித விடைத்தாளில் 10 மதிப்பெண் கூட்டாமல்
விடுபட்டுள்ளது. அதை கூட்டினால் எனக்கு 10 மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும்.
இப்படியாக பல மாணவ- மாணவிகள் இணை இயக்குனர் அமுதவல்லியிடம் பெற்றோருடன் சென்று புகார் தெரிவித்தனர்.
இது குறித்து இணை இயக்குனர் அமுதவல்லி கூறியதாவது:-
தேர்வு கூடத்தில் சரியாக கண்காணிக்காத ஆசிரியர்
மீது நடவடிக்கை எடுத்தால் ஆசிரியர் சங்கத்தினர் குரல் கொடுத்து போராட்டம்
நடத்துகிறார்கள். புகார் தெரிவித்த மாணவர்களில் சிலர் மறுகூட்டலுக்கு
விண்ணப்பிக்காதவர்கள். சில மாணவர்கள் மறு மதிப்பீடு சரியாக செய்யவில்லை
என்கிறார்கள். மறுமதிப்பீடு செய்வது 3 ஆசிரியர்கள் கொண்ட குழுதான்
செய்கிறது. மாணவர்கள் கொடுத்துள்ள புகார்கள் வாங்கப்பட்டுள்ளது. அரசு
தேர்வுகள் இயக்குனரிடம் தெரிவித்து அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான்
இறுதியானது.
இவ்வாறு அமுதவல்லி தெரிவித்தார்.
சாத்தியமா?
மருத்துவ கலந்தாய்வு 19-ந் தேதி தொடங்க உள்ளது.
என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில்
மறு மதிப்பெண் குறைந்ததாக தெரிவிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மீண்டும் மறு
மறுப்பீடு செய்யப்படுவது சாத்தியமா என்ற கேள்வி ஏழுந்து உள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த
ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 விடைத்தாள் களை சரியாக மதிப்பீடு
செய்யாத 40 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.