'இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், ஜூலை 1 முதல், கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்; இல்லையென்றால், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்' என, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவின் எதிரொலியே இந்த அறிவிப்பு.இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும், கண்டிப்பாக, ஹெல்மெட் அணிய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
'எக்ஸ்ட்ரா லக்கேஜ்':
இனிமேல் வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும், 'எக்ஸ்ட்ரா லக்கேஜ்' ஆக, கூடுதலாக ஒரு, ஹெல்மெட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
இல்லையென்றால், மனைவி, உறவினர், நண்பர் என, யாரையும் பின் இருக்கையில் அமர்த்த முடியாது.மோட்டார் வாகன சட்டப் பிரிவு, 129ல், இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர், பயணிப்பவர், பாதுகாப்பு தலைக்கவசம் - 'ஹெல்மெட்' அணிய வேண்டும். அந்த தலைக்கவசம், 'பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு' நிர்ணயித்துள்ள தரத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த பிரிவு, அதாவது, கட்டாய தலைக்கவசம் அணிவது, சீக்கியர்களுக்கு பொருந்தாது. மாநில அரசு விரும்பினால், விதிவிலக்கு அளிக்கலாம் எனவும், சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.தமிழக அரசைப் பொறுத்தவரை, விதிவிலக்கு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
வாகன ஓட்டிகளுக்கு, இன்னும் ஒரு பிரச்னை உள்ளது. வாகனத்தை ஓட்டுபவர், ஹெல்மெட் அணிந்து, பின்னால் உட்கார்ந்திருப்பவர் அணியவில்லை என்றால், ஆணவங்கள் பறிமுதல் செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.ஆவணங்கள் பறிமுதல் செய்வது என்பது, வாகனத்தை முடக்கி வைப்பது போல் தான். ஏனென்றால், ஓட்டுனர் உரிமம், வாகன ஆவணங்கள் இல்லாமல், வாகனத்தை ஓட்ட முடியாது. அப்படி ஓட்டினால், அது, சட்டப்படி குற்றம். அதனால், இந்த குற்றத்துக்காக, போலீசார் நடவடிக்கை எடுக்க முடியும்.எந்தெந்த குற்றங்களுக்காக,
ஆவணங்களை முடக்கி வைக்க போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை, மோட்டார் வாகன சட்டப் பிரிவு, 206 விளக்குகிறது.
ஆவணங்களை முடக்கலாம்...:
இந்தப் பிரிவில், ஹெல்மெட் அணியாததற்காக, ஆவணங்களை முடக்கலாம் என, கூறப்படவில்லை.ஹெல்மெட் அணியவில்லை என்றால், அபராதம் விதிக்க தான், சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தவறு செய்தால், 100 ரூபாய், தொடர்ந்து செய்தால், ஒவ்வொரு முறையும், 300 ரூபாய், அபராதம் விதிக்கலாம்.ஹெல்மெட் அணியாததால், 10 ஆண்டுகளில் ஏற்பட்ட உயிரிழப்பு, 1,670ல் இருந்து, 6,419 ஆக உயர்ந்துள்ளது. 'இந்த அசாதாரண சூழ்நிலையால் தான், சட்டத்துக்கு அப்பாற்பட்டு, உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தேவை உள்ளது' என, நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.
அதற்கு முன்னுதாரணமாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த,பிரிதிபால் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, நீதிபதி கிருபாகரன் மேற்கோள் காட்டியுள்ளார்.ஆவணங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடுவதன் நோக்கம், ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்காக தான் எனவும், நீதிபதி தெளிவுபடுத்தி உள்ளார். அதேநேரத்தில், 'நீதிமன்ற உத்தரவு மூலம், வாகன ஓட்டிகளை தேவையின்றி இடையூறு செய்யக் கூடாது' என, போலீசாருக்கும் அறிவுறுத்தி உள்ளார்.
உற்பத்தியாளர்கள் பொறுப்பு!
மோட்டார் வாகன விதிகளின்படி, வாகன உற்பத்தியாளர்கள், ஹெல்மெட் வழங்க வேண்டும். இருசக்கர வாகனங்களை வாங்கும் போது, வாகன உற்பத்தியாளர்கள், 'பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு' நிர்ணயித்துள்ளபடி, ஹெல்மெட் வழங்க வேண்டும்.விதிகளில் இது இடம் பெற்றிருந்தாலும், வாகனங்களை விற்பனை செய்யும் டீலர்கள், இதை அமல்படுத்துவதில்லை. எனவே, வாகன உற்பத்தியாளர்கள், இதை கண்டிப்புடன் அமல்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கேரளாவிலும் இதே பிரச்னை!
கேரள மாநிலத்திலும், மோட்டார் வாகன சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்தும் விதமாக, வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிய வேண்டும் என, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அந்த உத்தரவில், 'வாகன ஓட்டிகள், பயணிப்பவர்கள் அணியும், ஹெல்மெட், ஐ.எஸ்.ஐ., தரத்தில் இருக்க வேண்டும்' என, கூறப்பட்டது. அதை எதிர்த்து, கேரளா ஆட்டோ டூ வீலர் சங்கம், மேல்முறையீடு செய்தது.மனுவை, நீதிபதிகள் ஏ.ஆர்.லட்சுமணன், சங்கரசுப்பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மோட்டார் வாகன சட்டப் பிரிவு, 129ல், கொண்டு வரப்பட்ட திருத்தம் குறித்து, தனி நீதிபதியின் கவனத்துக்கு, மனுதாரரோ, மாநில அரசோ, கொண்டு வரவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை பார்க்கும் போது, கேரள மோட்டார் வாகன விதிகளை அமல்படுத்துவது போலாகும். அந்த விதியில், 'ஐ.எஸ்.ஐ., தரம் உடைய ஹெல்மெட் அணிய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இந்த விதியை, அமல்படுத்த முடியாது. ஏனென்றால், பிரிவு 129ல், திருத்தம் கொண்டு வரப்பட்டு விட்டது. அதன்படி, ஹெல்மெட் குறித்து, 'பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு' அமைப்பு நிர்ணயித்த தரத்தை தான், கேரள அரசு பின்பற்ற வேண்டும். பிரிவு, 129ல் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை கவனிக்காமல், வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவில் குறுக்கிடுவதை தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை.தனி நீதிபதியின் உத்தரவை, ரத்து செய்கிறோம். மனுவை தள்ளுபடி செய்வதால், 'பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு' நிர்ணயித்த தரத்தை, கேரள அரசு அமல்படுத்துவதில் இந்த உத்தரவு குறுக்கே நிற்காது.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு, 2000, ஜனவரியில் பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, ஓய்வு பெற்றவர்.