தமிழகத்தில், இடிந்து விழும் நிலையில்,
மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள, 2,500 தொடக்கப் பள்ளிக்
கட்டடங்களை, உடனே இடித்துத் தள்ளும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு,
பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை மற்றும்
உயர்நிலைப் பள்ளிக் கட்டடங்கள், பல இடங்களில் மோசமான நிலையில் உள்ளன.
இதில், பல நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. மார்ச் மாதத்தில், ஒரே
வாரத்தில் மூன்று இடங்களில், பள்ளிகளின் கட்டடம் இடிந்து விபத்து
ஏற்பட்டது.
* மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகில்,
எம்.புதுப்பட்டியில் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியின் கைப்பிடி சுவர்
இடிந்ததில், ஐந்து மாணவ, மாணவியர் காயமடைந்தனர்.
* விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில், வட அகரம் ஊராட்சி ஒன்றிய
பள்ளியில், அலங்கார வளைவு சுவர் இடிந்ததில், ஐந்தாம் வகுப்பு மாணவன் பலியானான்.
* சென்னை, பெருங்குடியில் அரசு தொடக்கப்
பள்ளியில், வகுப்பறையின் மேற்கூரை சுவர் இடிந்து விழுந்தது. இதில்,
வகுப்பறையில் மாணவ, மாணவியர் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை இந்தத் தொடர்
விபத்துகளைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் ஓட்டை, உடைசலாக இருக்கும்
பள்ளிகள், கட்டடங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் நிலை, சரி செய்வதற்கான
மதிப்பீடு குறித்து விரிவான அறிக்கை அனுப்ப, அனைத்து மாவட்டக் கல்வி
அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
இதில், தமிழகத்தில் உள்ள, 20 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில், 5,000 பள்ளிகளின் கட்டடச் சுவர்கள் பலவீனமாக
இருப்பதாக, தொடக்கக் கல்வி இயக்குனரகத்துக்கு பட்டியல் வந்தது. இதன்படி,
அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தியதில், 2,495 பள்ளிகளின் கட்டடங்கள் இடிந்து
விழும் அபாய நிலையில் உள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மோசமாக உள்ள,
2,495 பள்ளிகளின் நிலை குறித்து, கட்டடப் பராமரிப்பு அதிகாரிகள் மூலம்,
மாவட்டக் கலெக்டர்களுக்கு தகவல் தரும்படி, தொடக்கக் கல்வி இயக்குனர்
இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'இந்தப்
பள்ளிகளின் கட்டடங்கள் அபாய நிலையில் உள்ளதால், அந்தக் கட்டடங்களை உடனடியாக
இடித்துத் தள்ள வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்து, விபத்துகளைத்
தடுக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளோம்' என்றனர்.
இடியும் பள்ளிகள் இனி என்னாகும்?
மோசமான நிலையிலுள்ள,2,500 பள்ளிக் கட்டடங்களை இடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில், இப்பள்ளிகளின் நிலை இனி என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
* பல தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம்
வகுப்பு வரை, ஒரே ஆசிரியர் மட்டுமே உள்ளார். இந்த ஓராசிரியர் பள்ளிக்
கட்டடங்கள் இடிக்கப்பட்டால், மாணவர்களின் கதி என்ன; அவர்களுக்கு எங்கே
வைத்து பாடம் நடத்தப்படும்.
* இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் வேறு பணிக்கு
அல்லது வேறு பள்ளிக்கு அனுப்பப்படுவரா; அருகில் தற்காலிக கொட்டகை அமைத்து,
பாடம் கற்றுத் தரப்படுமா?
*கட்டடம் இடிந்த சூழலில், பெற்றோர் இந்தப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க
முன்வருவரா?
* இந்தப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குமா அல்லது மூடப்படுமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள்
கூறியதாவது:அனைவருக்கும் கல்வித் திட்டமான, 'சர்வ சிக் ஷா அபியான்'
திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியில், இந்தப் பள்ளிகளுக்கு புதிய
கட்டடங்கள் கட்டப்படும். கட்டட இடிப்புக்கு முன், பள்ளி வகுப்புகள்,
அருகிலுள்ள அங்கன்வாடி, சமூக நலக்கூடங்கள் அல்லது அருகிலுள்ள பள்ளிகளின்
கட்டடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளை எந்தக் காரணத்தைக்
கொண்டும் மூடவோ அல்லது ஆசிரியர்களை வேறு பணிக்கு மாற்றவோ திட்டம் இல்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.