அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே, இவர்கள்
கணினியில் எம்.எஸ்.வேர்டு, பவர் பாய்ன்ட், போட்டோ ஸ்டோர் டு மூவி மேக்கர்
ஆகிய பல்வேறு மென்பொருள்களில் சிறந்து விளங்கினர். இவர்கள், தங்களது
வீட்டின் அருகே உள்ள ஏழை மாணவர்களுக்கு கணினி தொடர்பான பல்வேறு பயிற்சிகளை
இலவசமாக பயிற்றுவித்து வருகின்றனர்.
மாணவர்களின் சேவையைப் பாராட்டிய பள்ளி
ஆசிரியர்கள், அவர்களுக்கு மடிக்கணினி வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினர்.
மேலும், மாணவர்களின் செயலைப் பாராட்டிய பள்ளிக் கல்வித் துறை, மாநில
கல்வித் துறை அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கு கணினிப் பயிற்சி வழங்கும்
வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்
கொண்ட மாணவர்களை கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினர்.
இந்த நிலையில், சிறந்த முறையில் சமூகப் பணி
புரிந்த மாணவர்களை பாராட்டிய தனியார் காப்பீட்டு நிறுவனம், 2015-ஆம்
ஆண்டுக்கான சமூக விழிப்புணர்வு விருதுக்கு அவர்களைத் தேர்வு செய்து புது
தில்லிக்கு கடந்த ஏப்ரல் 5, 6 தேதிகளில் அழைத்துச் சென்றது. தனியார்
நிறுவனம் சார்பில் நடந்த அந்த விருதுப் போட்டிக்கு பல்வேறு மாநிலங்களைச்
சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இறுதியில், தமிழ்நாடு, ராஜஸ்தான், தில்லி ஆகிய
மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையே அவர்கள் செய்த தொண்டுகளின்
அடிப்படையில் தேர்வு நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் மாணவர்கள் முதலிடத்தைப்
பெற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 2-ஆம் இடத்தையும், தில்லி
மாணவர்கள் 3-ஆம் இடத்தையும் பெற்றனர். தொடர்ந்து, மாணவர்களுக்கு விருது
வழங்கப்பட்டது. விருது பெற்ற மாணவர்களை ஆட்சியர் வே.க. சண்முகம்
திங்கள்கிழமை பாராட்டினார்.
இதுகுறுத்து மாணவர்களை தில்லிக்கு அழைத்துச் சென்ற அஸ்தினாபுரம் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் எஸ். சித்ரா கூறியதாவது:
மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக தாங்கள் வசிக்கும்
கிராமத்தில் கணினி அறிவு இல்லாத குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில்
கணினிப் பயிற்சி அளித்து வந்தனர். இதுவரை சுமார் 200-க்கும் மேற்பட்ட
குழந்தைகளுக்கு அவர்கள் கணினிப் பயிற்சி அளித்துள்ளனர். மேலும், கோடை
விடுமுறையிலும் கடந்த 2 ஆண்டுகளாக கணினிப் பயிற்சி அளித்து வருகின்றனர்.
மேற்கண்ட விருதுக்கு இந்தியா முழுவதுமிருந்தும்
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் செய்த சமூகத் தொண்டை
அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பித்திருந்தனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த
அஸ்தினாபுரம் மாணவர்களுக்கு விருது கிடைத்துள்ளது.
இந்த விருதுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள்
அனைவரும் தனியார் பள்ளியில் படித்து வரும் நல்ல வசதி படைத்த குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள். இதில், தமிழகம் சார்பில் சென்ற எங்கள் பள்ளி மாணவர்கள்
மட்டுமே அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் என்றார் பெருமிதத்துடன்.
விருது பெற்ற மாணவர்கள் கூறுகையில், எங்களுக்கு
இளமைப் பருவம் முதல் கணினியில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இதற்கு எங்கள்
பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பெரிதும் உதவி புரிந்தனர். எங்களுக்கு
கணினி உள்பட தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினர். கிராமப்
பகுதி ஏழை மாணவர்கள் அனைவருக்கும் கணினியில் சிறந்த பயிற்சி வழங்க வேண்டும்
என்பதே எங்களது குறிக்கோளாகும். இந்தப் பணியை தொடர்ந்து செய்து வருவோம்
என்றனர்.