புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்புஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.மத்திய அரசுப் பணியில் கடந்த 1.1.2004-க்கு பிறகு சேர்ந்த அனைத்துஊழியர்களும் (முப்படையினர் தவிர) புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (Contributory Pension Scheme-CPF) என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தில் 1.4.2003-க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கென ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் பிரத்யேக சிபிஎஃப் எண் கொடுக்கப்பட்டு அந்த கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்படும். சிபிஎப் கணக்கில் உள்ள தொகைக்கு ஆண்டுக்கு 8.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இவ்வாறு ஊழியரின் கணக்கில் சேரும் தொகை, அவர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் திருப்பிக் கொடுக்கப்படும். எஞ்சிய 40 சதவீத தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும். தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தைப் பொறுத்தவரையில், ஊழியர்கள் தங்களின் பொது வருங்கால வைப்புநிதியில் (ஜிபிஎப்) இருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு கடன்பெறலாம். கடனை திருப்பி செலுத்திய பிறகு மீண்டும் கடன் பெறமுடியும். மேலும் 15 ஆண்டு பணி முடிவடைந்ததும் ஜிபிஎப் நிதியில் இறுதித்தொகையின் ஒரு பகுதியை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஜிபிஎப் போன்று கடன்பெறும் வசதியோ, பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியோ இல்லாமல் இருந்துவந்தது.
இந்த நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்கள் 10 ஆண்டுகள் பணியைமுடித்திருந்தால் அவர்கள் சிபிஎப் கணக்கில் தாங்கள் செலுத்திய தொகையில் இருந்து 25 சதவீதத்தை திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்று புதிய ஓய்வூதிய திட்டத்தை கவனித்து வரும் அமைப்பான ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. எனினும், இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டுள்ளன. அதன்படி, சந்தாதா ரர்கள், தங்கள் பணிக் காலத்தில் 3 முறை சிபிஎப் தொகையை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். பிள்ளைகளின் படிப்பு செலவு, திருமண செலவு, வீடு அல்லதுஅடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு, மருத்துவ செலவினங்களுக்கு (புற்றுநோய், சீறுநீரக குறைபாடு, இதய நோய் போன்றவை) இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு முறைக்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும்.
இருப்பினும், மருத்துவ செலவினத்துக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள் ளது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். எனினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சிபிஎப் திட்டத்துக்கு வரவேற்பு இல்லை. இதுகுறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறும்போது, “2003-க்கு முன்பு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களைப் போல சிபிஎப் திட்டத்திலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை கடன்பெறவும், 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் இறுதித் தொகையில் ஒரு பகுதியை திரும்ப எடுத்துக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்றார்.