தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக,
ஏழு ஒன்றியங்களில், புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை துவக்க,
கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.அரசாணையில் கூறியிருப்பதாவது:கடலுார்,
காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலுார், நீலகிரி, திருவாரூர்,
விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர் அதிகமாக
உள்ளனர்.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில்,
தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியருக்கென, அதிக முன்னுரிமை அளிக்க
வாய்ப்பில்லை.எனவே, 2016 - 17ம் கல்வியாண்டு முதல், குறிப்பிட்ட ஏழு
மாவட்டங்களில், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைத்து செயல்படுத்த,
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிறுவனங்களுக்கும், மத்திய, மாநில அரசின்,
75 மற்றும் 25 சதவீத நிதி ஒதுக்கீடு வழங்கப்படும். இவ்வாறு, அரசாணையில்
கூறப்பட்டுள்ளது.புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 50 மாணவர்கள் வீதம்
சேர்க்கப்படுவர் என்றும், ஒரு நிறுவனத்திற்கு, ஏழு பேராசிரியர்கள்
நியமிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.
ஒன்றியங்களிலுள்ள, வட்டார வள மையத்திற்கு
அருகிலேயே, இந்நிறுவனங்கள் அமைப்பதற்கு, இடம் தேர்வு செய்ய வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள், இடத்தை தேர்வு செய்யும் பணியில்
ஈடுபட்டுள்ளனர்.