தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,
ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு இந்த மாதம் ஊதியம் வழங்குவதில் தாமதம்
ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியானது பண பரிவர்த்தனையை சென்னையில் இருந்து
மும்பைக்கு மாற்றியதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள்,
குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியமானது, ஒவ்வொரு மாதத்தின் கடைசி
நாளில் வழங்கப்பட்டு விடும். ஊதியமானது, ஒவ்வொரு ஊழியரின் வங்கிக் கணக்கில்
வரவு வைக்கப்படுவது வழக்கம்.
இந்த மாதம் ஏப்ரல் 30ஆம் தேதியன்று மாத
ஊதியமானது வரவு வைக்கப்பட வேண்டும். ஆனால், மே 2 ஆம் தேதி (சனிக்கிழமை)
வரையில் மாத ஊதியம் வரவு வைக்கப்படவில்லை. இதுகுறித்து, அரசுத் துறை
உயரதிகாரிகள் கூறியது: ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு
ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் மாத ஊதியம் வரவு
வைக்கப்படுகிறது. இந்தப் பணியை மாவட்டங்களில் உள்ள கருவூலத் துறை
அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மாவட்டங்களில் உள்ள வங்கி
மேலாளர்களுடன் தொடர்பு கொண்டு சம்பளப் பட்டியலை அளிக்கும் நடைமுறை முன்பு
பின்பற்றப்பட்டு வந்தது. இதனால், ஊதியமானது வங்கிக் கணக்குகளில் விரைந்து
வரவு வைக்கப்பட்டு விடும்.
ஆனால், ஏப்ரல் மாத இறுதி நாளான 30 ஆம்
தேதியன்று மாலை வரை அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் அளிக்கப்படவில்லை.
இதற்குக் காரணம் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வந்த மின்னணு பண பரிவர்த்தனை
முறையானது சென்னையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது தான்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த, இந்த பண பரிவர்த்தனை
முறையானது மும்பைக்கு மாற்றப்பட்டு விட்டது. இதனால், தமிழகத்தில் இருந்து
அனுப்பப்படும் ஊதியப் பட்டியல் உள்ளிட்டவை மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி
மையத்தில் தாமதமாகக் கையாளப்படுகின்றன. இந்த தாமதத்தின் எதிரொலியாகவே அரசு
ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு
ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னையில் பெரும்பாலானோருக்கும்,
கிருஷ்ணகிரி, கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மாத
ஊதியம் வரவு வைக்கப்படவில்லை. மே 4-ஆம் தேதி அல்லது அதிலிருந்து ஒருசில
நாள்களுக்குள் சம்பளம் வரவு வைக்கப்படும் என்று உயர் அதிகாரிகள்
தெரிவித்தனர்.