தலைமையாசிரியர் பதவி உயர்வு, மருத்துவ விடுப்பை அனுமதிக்காமல் தனக்கு பள்ளி நிர்வாகம் நெருக்கடி அளித்து வருவதாக திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் பெண் ஆசிரியை புகார் மனு அளித்தார்.
பாளையங்கோட்டையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருபவர் கே. சுந்தரராஜன் மனைவி பார்வதி, அளித்த புகார் மனு: இந்துஅறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் தொடக்கப் பள்ளியில் 1993 இல் இருந்து ஆசிரியராக பணி செய்து வருகிறேன். மூத்த ஆசிரியையான எனக்கு இப்பள்ளியின் தலைமையாசிரியர் பதவி வழங்காமல், என்னை விட பணியில் இளைய ஆசிரியை ஒருவருக்கு பதவி உயர்வை விட்டுக் கொடுக்குமாறு பள்ளி நிர்வாகம் தரப்பில் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
கல்வித்துறை மூலம் எனக்கு பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கும் வகையில் பள்ளியில் பணி செய்து வரும் பிற ஆசிரியர்களும் நிர்வாகத்துடன் சேர்ந்து எனக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ விடுப்பில் சென்ற 26 நாட்களை அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகம் கடந்த 7 மாதமாக இழுத்தடித்து வருகிறது. பதவி உயர்வு, வருடாந்திர ஊதிய உயர்வு, மருத்துவ விடுப்பினை அனுமதிக்காமல் என்னை விருப்ப ஓய்வில் செல்லுமாறு நெருக்கடி அளித்து வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.