துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின்
கல்வித்தரத்தை அறிய, அவர்கள் எழுதிய தேர்வு விடைத்தாள்களை, மற்ற ஒன்றிய
பள்ளி ஆசிரியர்கள் மூலம் திருத்துவதற்கு, கல்வித்துறை ஏற்பாடு செய்ய
வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
விடைத்தாள்கள் மட்டுமே, பிற மாவட்ட ஆசிரியர்கள் மூலம் திருத்தப்படுகின்றன.
மாணவர்களின் கல்வித்தரத்தை அளவிடுவதில், எவ்வித முறைகேடும் நடைபெறாமல்
இருக்க, இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது.
தற்போது, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை,
ஆல்பாஸ் முறை என்பதால், மாணவர்கள் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை
என்ற புகார் உள்ளது. தேர்வில் முழுமையாக விடை எழுதாவிட்டாலும்,
அம்மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டிய கட்டாயத்தில், ஆசிரியர்கள்
உள்ளனர். இதனால், பல பெற்றோருக்கு குழந்தைகளின் கல்வித்தரம் குறித்து,
முழுமையாக அறிய முடிவதில்லை.
இந்நிலையை மாற்றும் வகையில், பல மாவட்டங்களில்
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தேர்வு விடைத்தாள்களை, மற்ற ஒன்றிய பள்ளி
ஆசிரியர்களின் மூலம் திருத்துவதற்கான நடவடிக்கைகள், தற்போது
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்மூலம், மாணவர்களின் உண்மையான
கல்வித்தரத்தையும், பள்ளியின் தரத்தையும் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
இந்த நடைமுறையை, தமிழ்நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும் என,
பெற்றோர்களும்,கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதை தொடக்கக் கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும்.
நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்களின் கல்வித்தரத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்வதால்,
அவர்கள் தேர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தேர்வு முடிவு
தெரிவிக்கப்படும் நாளில், அதை தெரிந்து கொள்வதில் கூட ஆர்வம்
காட்டுவதில்லை. மாணவர்களை, கட்டாயம், பாஸ் செய்தே தீர வேண்டும் என்ற
நிலையில், ஆசிரியர்கள் உள்ளனர்.
பள்ளிகளின் கற்பித்தல் நிலை என்ன என்பதை,
அந்தந்த பள்ளி நிர்வாகத்தினரே அளவிட முடியாத நிலை உள்ளது. மற்ற பள்ளி
ஆசிரியர்கள் மூலம் தேர்வு விடைத்தாள்களை திருத்தினால், மாணவர்களின்
கல்வித்திறன் மட்டுமின்றி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் சுயமதிப்பீடு
செய்ய முடியும்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நடப்பது
போல், துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும், மூன்றாம்
பருவத்தேர்வை முன்னதாகவே நடத் தினால், அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கையை
விரைந்து துவக்க முடியும். இதற்கு, மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற அரசின் முடிவால் அனைவரையும் தேர்ச்சியடைய வைக்கவேண்டும் என்ற நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகிறார்கள்.