இந்திய அளவில் படித்தவர்களின் சராசரி விகிதம் 74. ஆனால் பீகாரில் 63 சதவீதம் பேரே படித்துள்ளனர்.
அடிப்படைக்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை
அதிகரிப்பதற்காக நிதீஷ்குமார் ஏற்கனவே முதல்–மந்திரியாக இருந்த போது 3.5
லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்தார். இவர்களுக்கு
மதிப்பூதியம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டது.
அந்த மாநிலத்தில் உள்ள 80 ஆயிரம் நிரந்தர
ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் சராசரியாக ரூ.40 ஆயிரம். ஆனால், தற்காலிக
ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளமாக தலா ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
2 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தகுதி
இல்லாதவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
தற்போது பீகார் மாநில தொடக்கப் பள்ளிகளில் 63
மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. எனவே, நிரந்தர
ஆசிரியர்களுக்கு இணையாக சம்பள உயர்வு, கூடுதல் ஆசிரியர் நியமனம் உள்பட
பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்
ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
இதுகுறித்து மாநில கல்வி மந்திரி பி.கே.சகி
கூறும்போது, ‘‘ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து அரசுடன் பேசப்போகும் 15
உறுப்பினர்களின் பட்டியலை முதலில் அவர்கள் தரட்டும். அதன் பிறகு பேசி
முடிவு செய்யலாம்’’ என்றார். ஆனால் ஆசிரியர் சங்க தலைவர் புரன்குமார்,
‘ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிய அரசு இப்போது பின்
வாங்குகிறது’ என்றார்.
இந்த நிலையில் நியமன ஆசிரியர்கள் நேற்று முன்
தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினார்கள். நேற்று பல்வேறு
மாவட்டங்களில் பள்ளிகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடந்தது.
இதையடுத்து பீகார் மாநிலம் முழுவதும் 73 ஆயிரம்
ஆரம்ப பள்ளிகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த
போராட்டத்துக்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பா.ஜனதா ஆதரவு அளித்துள்ளது.