பிளஸ்
2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு, போதிய ஆசிரியர்கள் வராததால், திருத்தும்
பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத் துறை,
'நோட்டீஸ்' அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ல்
துவங்கி, 31ம் தேதியுடன் முடிந்தது; இம்முறை பிளஸ் 2 தேர்வு, பல
மாற்றங்களுடன் நடந்தது; ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகள்
விதிக்கப் பட்டன.பிளஸ் 2 தேர்வு நடக்கும் போதே, 10ம் வகுப்புக்கும், பிளஸ்
1க்கும் தேர்வுகள் துவங்கின; விடைத்தாள் திருத்தமும், தேர்வுகள் நடக்கும்
போதே துவங்கின.
ஏப்.,
16 முதல், மொழிப்பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன; பின், மற்ற
பாடங்கள் திருத்தும் பணி துவங்கியது.இந்தப் பணிகளை, வரும் 14ம் தேதிக்குள்
முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பின், 20ம் தேதியிலிருந்து, 10ம்
வகுப்புக்கு திருத்தும் பணி துவங்குகிறது.
ஆனால், தேர்வுத் துறை
திட்டமிட்டபடி குறிப்பிட்ட காலத்தில், விடைத்தாள் திருத்தும் பணி
முடியவில்லை; பல இடங்களில் திருத்தம் தாமதமாகி உள்ளது.இதுகுறித்து,
தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன், துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிக்கல்வித்
துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதில், மெட்ரிக் பள்ளிகள் விடை
திருத்தப் பணிகளுக்கு, போதிய அளவுக்கு ஆசிரியர்களை அனுப்பவில்லை என்று
தெரியவந்தது. அந்த பள்ளிகளின் பட்டியலை பெற்று, 'நோட்டீஸ்' அனுப்பி
விளக்கம் கேட்க, தேர்வுத் துறை இயக்குனர் உத்தரவிட்டார்.
இதன்படி, தனியார் பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை,'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. அதில்,
தலைமைஆசிரியர்களை தேர்வுத் துறை இயக்குனரகத்தில், நேரில் ஆஜராக உத்தரவிட்டு
உள்ளது. தனியார் பள்ளிகளில் இருந்து, தாங்கள் எத்தனை ஆசிரியர்களை, எந்த
விடைத்தாள் திருத்தத்துக்கு, எந்த தேதியில் அனுப்பினர் என்பதை
எழுத்துப்பூர்வமாக பட்டியல் தரவும், மீதமுள்ள விடைத்தாள் திருத்தத்துக்கு,
கூடுதல் ஆசிரியர்களை அனுப்புவது குறித்த பட்டியலுடன், விளக்கம் தரவும்
உத்தரவிடப்பட்டு உள்ளது.