மதுரையில் தொடக்க பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்று பல ஆண்டுகளான நிலையில், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பணப் பலன்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற கல்வித் துறையின் உத்தரவால் அதிர்ச்சியில் உள்ளனர்.மதுரை மாவட்டத்தில் டி.கல்லுப்பட்டி உட்பட 15 கல்வி ஒன்றியங்கள் உள்ளன.
இவற்றில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாக நியமனம் பெற்று, 1.6.1988க்கு பின் தலைமையாசிரியர்களாக பணியேற்ற 100க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு தொடக்க கல்வி அலுவலகங்கள் சார்பில் நேற்று ஒரு உத்தரவு அனுப்பப்பட்டது.உத்தரவில், ''அரசாணை 207' ன்படி உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தனிஊதியம் அடிப்படையில் பெறப்பட்ட ஓய்வூதிய பலனில் இருந்து, அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டிய தொகை இவ்வளவு' என்றும் 'ஜூன் 26க்குள் அதை திரும்ப செலுத்த வேண்டும்' என குறிப்பிடப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ரூ.68 ஆயிரத்தில் இருந்து இத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பெற்ற சிலர் அதிர்ச்சியுற்றனர்.
ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூறியதாவது:
தொடக்க கல்வியில் 1.6.1988 அன்று தலைமையாசிரியர்களாக பணியேற்றவருக்கு
தனி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு பின் பணியேற்றவர்கள் தங்களுக்கும் தனிஊதியம் நிர்ணயிக்க நீதிமன்றம் சென்றனர். இதன்படி 'அரசு உத்தரவு 207' பிறப்பிக்கப்பட்டு பணப் பலன் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து அரசு உத்தரவில் முரண்பாடு இருப்பதாக கூறி வழங்கிய பணத்தை திரும்ப செலுத்துமாறு கல்வித் துறை உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி பிறப்பிக்கப்பட்டதில் முரண்பாடு இருப்பதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. இதை ரத்து செய்ய வேண்டும். மேலும் நிலுவை தொகை வழங்காத ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கும் அதை வழங்க வேண்டும். மாநில கணக்காயர் அலுவலகம் நிர்ணயம் செய்ததை உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் மாற்றம் செய்ய முடியாது என்றனர்.