பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு 14 வகையான பணியிடப் பயிற்சிகளை அளிக்க பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
மாநிலக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.இதுகுறித்து மாநில கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திங்கள் கிழமை வெளியிட்ட செய்தி:ஆண்டுதோறும் இதுபோன்ற பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளிப்பதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் ஊக்குவிக்கப்படுகிறது.
இதுபோல, 2015-16 கல்வியாண்டில் தொடக்க, உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கில மொழி பயிற்சிகள் மட்டுமின்றி கணிதம் கற்பித்தல் பயிற்சி, அறிவியல் பயிற்சி, சமூக அறிவியல் பயிற்சி, உடற்கல்வி, அது சார்ந்த செயல்பாடுகளுக்கான பயிற்சி என 14 வகையான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
மொத்தம் 22 நாள்கள் வழங்கப்பட உள்ள இந்தப் பயிற்சிகளின் மூலமாக ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்படுவதோடு, கூர்ந்து ஆராயும் திறனும், மொழித் திறனில் வல்லமையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.